ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் உலகின் முதல் சேவை

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நேற்று (மே 3) ஜியோ இன்டெராக்ட் (JioInteract) எனும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தளத்தை துவங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த தளத்தில் முதற்கட்டமாக நேரலையில் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ செயலிகளில் ஏற்கனவே ஹெச்டி வீடியோ கால்கள் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், புதிய தளத்தில் இந்திய பிரபலங்களுக்கு வீடியோ கால் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் செய்ய முடியும். இவர் 102 நாட் அவுட் திரைப்படத்தை முற்றிலும் வித்தியாசமாக விளம்ரப்படுத்துவார் என ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.6 கோடி வாடிக்கையாளர்களையும், சுமார் 15 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்டிருப்பதாக ஜியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ இன்டெராக்ட் சேவை திரைப்படங்களை விளம்பரப்படுத்தவும், பிரான்டு ஊக்குவிக்கவும் முன்னணி தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரங்களில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் வீடியோ கால் சென்டர்கள், வீடியோ கேடேலாக், விர்ச்சுவல் ஷோரூம்கள் உள்ளிட்டவற்றை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தும் ஜியோவின் புதிய தளம் உலகில் முதல் முறையாக துவங்கப்பட்டிருப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது.

மே 4, 2018 முதல் ஜியோ இன்டெராக்ட் சேவையை கொண்டு ஜியோ மற்றும் இதர ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அமிதாப் பச்சனுக்கு வீடியோ கால் மேற்கொள்ள முடியும். வீடியோ கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் 102 நாட் அவுட் திரைப்படம் குறித்த தகவல்களை கேட்டறிந்து கொண்டு, திரைப்படத்திற்கான டிக்கெட்களை புக்மைஷோ மூலம் முன்பதிவும் செய்ய முடியும்.

சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஜியோவின் புதிய சேவை வாடிக்கையாளர்கள் கேள்விகளை மிக உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கு சரியாக பதில் அளிக்கும். இத்துடன் அதிக கேள்விகளை கேட்கும் போது கேள்விகளில் இருந்து பாடம் கற்கும் முறையை ஜியோ இன்டெராக்ட் கொண்டிருக்கிறது என்றும், காலப்போக்கில் இது பதில்களை மிகவும் நேர்த்தியாக வழங்கும் என ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ இன்டெராக்ட் சேவையை பயன்படுத்துவது எப்படி?

முதலில் மைஜியோ செயலியை டவுன்லோடு செய்யவும்

இனி மைஜியோ செயலியில் காணப்படும் ஜியோ இன்டெராக்ட் சேவையை கிளிக் செய்யவும்

அடுத்து வீடியோ கால் துவங்கி அமிதாப் பச்சனுடன் உரையாடலாம்

கூடுதலாக வாடிக்கையாளர்கள் தங்களது வீடியோ கால் அனுபவத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஷேர் ஆப்ஷன் மூலம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *