ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் விலை மற்றும் முழு விவரங்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், சேவையின் விலை மற்றும் முழு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவின் போது அதிக வரவேற்பை பெறும் நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட இருக்கும் நிலையில், அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிராட்பேன்ட் மற்றும் செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என ஜெ.பி. மார்கன் ஸ்டான்லி தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *