மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

மொபைல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டால், உடனடியாக மொபைலை நீரில் இருந்து வெளியே எடுங்கள். உடனடியாக மொபைலை ஆஃப் செய்யவும். ஏனென்றால் மொபைல் ஆனிலேயே இருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆக வாய்ப்பிருக்கிறது. மேலும், பல நேரங்களில் நீரில் விழும் மொபைல் தானாகவே ஆஃப் ஆகிவிடக் கூடும். எனவே பயப்பட வேண்டாம்.

சாம்சங் போன்ற பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் மொபைல்களிலும், வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். பொதுவாக பேட்டரி முனை அல்லது அதன் கீழ்ப்பகுதியில் வெண்ணிறத்தில் இந்த ஸ்டிக்கர் இருக்கும். நீரில் மூழ்கும்போது இதன் நிறம் சிவப்பாக மாறும் தன்மை கொண்டது. உங்கள் மொபைலின் உள்ளே நீர் இறங்கியிருக்கிறதா என்பதை இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

மொபைலை ஆஃப் செய்ததும் மேலே உள்ள மொபைல் கவர், பேட்டரி, சிம், மெமரி கார்டு என அத்தனை பாகங்களையும் தனித்தனியாகக் கழட்டிக் கொள்ளுங்கள். அதன்பின், சுத்தமான காட்டன் துணியால் அனைத்துப் பாகங்களையும் ஈரம் போகும் அளவு சுத்தம் செய்யுங்கள்.

நீர் இறங்காதவண்ணம் சிம் கார்டுகள் பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் சிம் கார்டில் உள்ள நீரைத் துடைத்து வேறொரு மொபைலில் பொறுத்துங்கள். சிம் கார்டில் சேமித்து வைத்திருக்கும் கான்டக்ட்ஸ் மற்றும் மெஸேஜ் போன்றவற்றைப் பத்திரமாக சேமித்துக் கொள்ளுங்கள்.

மொபைலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்காக எக்காரணம் கொண்டும் மொபைலை வேகமாக குலுக்க வேண்டாம். இதனால் உள்பக்கமாக மேலும் நீர் இறங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. நீரை உறிஞ்சக்கூடிய காட்டன் துணியால் சுத்தம் செய்வதே சிறந்தது.

மேற்பரப்பில் இருக்கும் நீரை சுத்தம் செய்தபின், மொபைலின் ஈரப்பதம் குறைய வேண்டும். அதனால் காற்றோட்டமான அல்லது வெயில் இருக்கும் இடத்தில் மொபைலை பாதுகாப்பாக வைக்கவும். தனித்தனியாகக் கழற்றி வைத்திருக்கும் அத்தனை பாகங்களையும் உலர வைக்கவும்.

ஈரப்பதத்தை வெளியேற்ற எக்காரணம் கொண்டும் ஹேர் ட்ரையர் (Hair Dryer) போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாதீர்கள். அதில் இருந்து வெளியேறும் வேகமான வெப்பக்காற்றால் நீரானது உள்பாகத்திற்குச் செல்ல வாய்ப்பு அதிகம். எனவே, ஹேர் ட்ரையரைப் (Hair Dryer) பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

இவ்வளவு செய்முறைகளுக்குப் பின்னும் மொபைலின் உள்பகுதியில் ஈரப்பதம் இருக்க வாய்ப்பு அதிகம். இந்தப் பிரச்னைக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய வழி ஒன்றிருக்கிறது. பெரிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி, அதன் உள்ளே மொபைலை வைத்து இறுக மூடிவிடுங்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அரிசியானது மொபைலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.

அதன்பின் காட்டன் துணியால் மொபைலின் அத்தனை பாகங்களையும் நன்கு துடைத்துவிட்டு, ஆன் செய்து பாருங்கள். தற்போது மொபைல் ஆன் ஆகிவிட்டால் சக்சஸ். இல்லை என்றால் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *