மைதாவில் செய்யும் பரோட்டா உடலுக்கு கெடுதலா?

parotta-1மைதா உற்பத்திக்காக, கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்டோஸ்பெர்ம் வழக்கம் போல அரவை எந்திரத்தில் மாவாக அரைக்கப்பட்டு சலித்து எடுக்கப்படும். இப்படி கிடைக்கும் மாவு பழுப்பு நிறமாக இருக்கும். இந்த மாவினை நல்ல தும்பைப்பூ போன்று வெண்மையாக மாற்ற பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கனவே ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருள் மட்டுமே அடங்கிய மைதாவை அதிகம் உண்பதால் உடலில் சர்க்கரைச்சத்து தான் அதிகரிக்கும். அதோடு, பழுப்பு மைதாவை வெள்ளையாக்குகிறேன் என்று ரசாயனம் சேர்ப்பதால் கூடுதல் கெடுதல் ஆரம்பமாகிறது.

மைதாவை வெளுப்பாக்க சேர்க்கப்படும் ரசாயனத்தில் முக்கியமானது பென்சைல் பெராக்சைடு, அடுத்தது குளோரின் ஆகும். இதில் இருந்து வரும் பிறவி நிலை குளோரின், மாவை வெளுப்பாக்கும். “இப்படி ஏன் வெளுப்பாக்கி சாப்பிட வேண்டும், அப்படியே பழுப்பு நிற மாவில் பரோட்டா சுடலாமே, பரோட்டா சுட்டபிறகு பழுப்பு நிறத்தில் தானே இருக்கும்” எனக்கேட்டால், “வெள்ளையாக இருந்தால் தான் நல்ல மாவு என்று மக்கள் வாங்குகின்றனர்” என்பது தான் பதில்.

இவ்வாறு மாவினை வெளுப்பாக்க பயன்படும் வேதிப் பொருள்களான பென்சைல் பெராக்சைடு, குளோரின் ஆகியவற்றின் சிறிதளவு எச்சங்களும் மாவில் தங்கிவிடும். எனவே, தொடர்ந்து மைதாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருளை உண்டு வந்தால் சில பக்க விளைவுகள் வர வாய்ப்பு உண்டு.

பான்கிரியாஸ் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளை இது பாதிக்கும். இதனால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நீரிழிவு நோய் வரலாம். சிறுநீரக கல், மாரடைப்பு, குளோரினால் வயிற்றில் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நார்ச்சத்து குறைவாக உள்ளதால் செரிமானக் கோளாறுகள் வரலாம். அதோடு அல்லாமல் இன்னொரு ரசாயனமும் இதில் இருக்கிறது. வீட்டில் கோதுமை மாவு, ரவை என டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்திருந்தாலும் சில நாட்களில் கருப்பாக ஒரு சிறிய வண்டு போல பூச்சி பிடித்துவிடுவதைப் பார்த்திருப்பீர்கள். இதனை சேமிப்பில் வரும் பூச்சி தாக்குதல் என்பார்கள்.

மூடை, மூடையாக அடுக்கி வைத்திருக்கும் மைதா மாவில் பூச்சி பிடிக்காமல் இருக்க மெதில் புரோமைடு என்ற ரசாயன புகை மூட்டத்தினை கிடங்கில் போட்டு, பின்னரே மைதா மாவினை சேமிப்பார்கள். இந்த ரசாயனம் மாவினுள் ஊடுருவி பூச்சி பிடிக்காமல் பாதுகாக்கும். இந்த மாவினைத் தான் நாம் பரோட்டா தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

இதனாலும் பாதிப்புகள் உண்டு. மேலும், பரோட்டா தயாரிக்கும் போது பரோட்டா மாஸ்டர்களும் சுகாதாரமற்ற முறையில் கைகளைப் பயன்படுத்தி மாவை பிசைவதுடன், புரோட்டா மென்மையாக வர சமையல் சோடா, மலிவான பருத்தி எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி நம்மை பயமுறுத்துகின்றனர்.

ஆகவே தான் மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களை அளவோடு உண்பது நல்லது. அதிலும் பரோட்டாவை விட்டு ஒதுங்கி இருப்பது மிகமிக நல்லது. ஆசைக்கு எப்போதாவது அளவோடு சாப்பிடுங்கள். தவறில்லை. பரோட்டா சாப்பிட்டு முடித்ததும் ஒன்றிரண்டு நாட்டு வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவது பாதுகாப்பானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *