மூலநோய் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் எவை எவை?

சில உடல்நல பிரச்சனைகள் வாழும் வாழ்க்கையையே மிகவும் கஷ்டமாக்கும். அதில் ஒன்று தான் பைல்ஸ் என்னும் மூலநோய். சரி, மூல நோய் என்றால் என்ன? ஆசன வாயில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதால் ஏற்படுவதாகும். பொதுவாக கோடைக்காலத்தில் பைல்ஸ் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள்.

பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். பலரும் தங்களுக்கு பைல்ஸ் உள்ளது என்றே தெரியாமல் உள்ளனர். இப்போது ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை பார்க்கலாம். அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளுள் ஒன்று மலம் கழிக்கும் போது இரத்தம் சேர்த்து வெளிவரும். இப்படி ஒரு அறிகுறியைக் கண்டால், சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

ஆசன வாய் பகுதியை தொடும் போது, அவ்விடத்தில் ஏதேனும் வீக்கம் இருப்பதைக் கண்டால், பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம்.

மலம் கழித்த பின்னரும், நீங்கள் நிம்மதியாக உணரவில்லை என்றால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

முக்கியமாக ஆசன வாய் பகுதியைச் சுற்றி கடுமையான அரிப்பு ஏற்பட்டால், அது மூல நோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மலம் கழிக்கும் போது, சளியும் வெளியேறுவதைக் கண்டால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறியாகும்.

பல நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்த பின், ஆசன வாய் பகுதியில் காயங்கள் மற்றும் சிவந்து இருப்பதோடு, உட்காரவே முடியாமல் தவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

உங்களுக்கு பைல்ஸ் ஏன் வருகிறது என்று தெரியவில்லையா?

பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். அதுவே கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிட்டால், ஆசன வாயில் புண் மற்றும் புற்றுநோய் ஏற்படும். இங்கு ஒருவருக்கு பைல்ஸ் எந்த காரணங்களுக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அளவுக்கு அதிகமாக கடுமையான உடற்பயிற்சியை செய்தால், அடிவயிற்றில் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பைல்ஸ் பிரச்சனை ஆரம்பமாகும். குறிப்பாக கால்களுக்கு கடுமையான உடற்பயிற்சியை செய்தால், இந்நிலை ஏற்படும்.

மலம் கழிக்க முடியாமல், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து மலம் கழிக்க முயற்சித்தால், ஆசன வாயில் உள்ள நரம்புகள் காயமடைந்து, பைல்ஸை உண்டாக்கும்.

மலச்சிக்கலால் குடலில் மலம் பல நாட்களாக தேங்கி, ஒரு கட்டத்தில் அதை வெளியேற்றும் போது, அதனால் ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸை உண்டாக்கும்.

வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ச்சியாக மலம் கழிக்கும் போது ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, பைல்ஸ் வரும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *