மூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்!

எப்போதாவது சாப்பிட்டாலும், அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது சூப். இன்றைக்கு உணவகங்களுக்குப் போனாலோ, உடல்நலமின்றி இருக்கும்போது டாக்டர்கள் பரிந்துரைத்தாலோதான் சூப்பை அருந்துகிறோம். மற்றபடி வெகு சிலர் மட்டுமே சூப் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எலும்பு சூப்

வெஜிடபிள் சூப், சிக்கன் சூப், மட்டன் சூப், ஹெர்பல் சூப்… எனப் பலவிதமான சூப் வகைகள் இருந்தாலும், எலும்பு சூப் தரும் பலன்கள் சிறப்பானவை. சிக்கன் மற்றும் மீன் எலும்புகளின் சூப் மருத்துவக் குணங்களுக்காக அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. எலும்பு சூப் ஊட்டச்சத்து நிறைந்தது; எளிதில் செரிமானமாகக்கூடியது.

மூட்டுகளைப் பாதுகாக்கும்

உடலால் எளிதாக உறிஞ்சப்படக்கூடிய நிலையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் போன்ற கனிமங்கள் எலும்பு சூப்பில் உள்ளன. மூட்டுவலியைக் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் மருந்தாகக் கொடுக்கப்படும் கான்ட்ராய்டின் சல்பேட் (Chondroitin sulfate) மற்றும் குளுக்கோசமைன் (Glucosamine) ஆகியவை எலும்பு சூப்பில் அடங்கி உள்ளன. மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகியவற்றைக் குறைப்பதற்காக விலை உயர்ந்த மருந்துகளாக இந்த கான்ட்ராய்டின் சல்பேட், குளுக்கோசமைன் போன்றவை விற்கப்படுகின்றன. விலை உயர்ந்த இந்த மருந்துகளுக்குப் பணத்தைச் செலவழிப்பதற்குப் பதில் இந்த சூப்பைக் குடிப்பது நல்லது.

எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்

சூப், எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணியாகச் செயல்படும். சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் சுவாச அமைப்பு மற்றும் செரிமான அமைப்புக்கு பலம் தருகின்றன. ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்துகின்றன.

உடல் எடை குறைக்க உதவும்

எலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், சூப் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துவதால் எடைக் குறைப்புக்கு உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

எலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின், நம் வயிற்றில் உள்ள நன்மை பயக்கும் புரோபயாடிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள் குடல் பாதையில் உள்ள செல்களின் செரிமானச் செயல்பாடுகளை அதிகரிக்கும். வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும்.

சருமத்தைப் பாதுகாக்கும்

எலும்பு சூப்பில் உள்ள கொலாஜன் ஆரோக்கியமான செல், செல் மறுசீரமைப்பு மற்றும் தோல் உறுதிப்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. தோலில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து, இளமையான தோற்றத்தையும் தருகிறது.

சூப்பில் உள்ள கொழுப்பை நீக்க விரும்பினால், சூப்பைக் குளிரவைத்து, அதன் மேல் படர்ந்திருக்கும் கொழுப்பை ஸ்பூனால் அகற்றலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *