முதல்வருக்கு நன்றி தெரிவித்த நேபாளத்தில் இருந்து பத்திரமாக திரும்பிய பக்தர்கள்.

நேபாளம் நாட்டில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கடந்த ஜூன் மாதம், தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை சென்றவர்கள் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் அறிந்து, அவர்களை பாதுகாப்புடன் மீட்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி தமிழக அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பு கொண்டு, சிமிகோட் பகுதியில் சிக்கி தவித்த 18 பக்தர்களை அங்கிருந்து நேபாள்கஞ்ச் என்ற இடத்துக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் நேபாள்கஞ்ச் சென்று, இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப்போடு, பக்தர்களை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.

தமிழக அரசின் உதவியால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பக்தர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், எல்.ஹரிஹரன், சி.என்.ரவி, டி.வி.சாந்தமூர்த்தி, கே.எஸ்.விஜயலட்சுமி, பி.அன்னபூர்ணா, ஜி.ஆனந்தம், வி.கோபாலகிருஷ்ணன், பி.பிரேமலதா, டி.எம்.சுப்பிரமணியம், ஏ.எஸ். லட்சுமி, ஆர்.சுப்பிரமணி, எஸ்.மீனாட்சி, என்.சக்திவேல் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை இன்று (நேற்று) தலைமைச்செயலகத்தில் சந்தித்து, தங்களை பாதுகாப்பாக மீட்டு, சொந்த ஊர் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேரிடர் மேலாண்மைத் துறை கமிஷனர் ராஜேந்திர ரத்னூ, சென்னை மாவட்ட கலெக்டர் வி.அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *