shadow

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்:

தொழில்நுட்ப பிரச்னை காரணமாக ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட பதிவுகள், பொதுவெளியில் பதிவானதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கும் உள்ள பல கோடி மக்களால், ஃபேஸ்புக் சமூக வலைதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு, ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டதாக வெளியான தகவல், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஃபேஸ்புக் மீண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

மென்பொருளில் ஏற்பட்ட பக் என்ற தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, ஃபேஸ்புக் பயனாளர்களின் தனியுரிமை சார்ந்த பதிவுகள், அவர்களுக்கு தெரியாமலேயே, பொதுவெளியில் பதிவிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஃபேஸ்புக் பயனாளர்கள், நண்பர்கள் மட்டுமே பார்க்கலாம் என்ற வகையில் கட்டமைத்து வைக்கப்பட்ட பதிவுகளை, யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்ற வகையில் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை அந்த பக் ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்குகளில் இந்த வகையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விளக்கமளித்திருக்கிறது.

Leave a Reply