shadow

மார்பகப்புற்று ரிஸ்க் அறிவோம்!

மார்பகப் புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையின் மூலம் குணமடைவது எளிதாகும். அதைவிட முக்கியமாக, மார்பகப்புற்று ஏற்படக் காரணமாகும் வாய்ப்புகளை அறிந்துகொள்ளுதலும், அவற்றைத் தவிர்த்தலும் அவசியம்’’ என்று சொல்லும் மார்பக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வி, அந்த ரிஸ்க் வாய்ப்புகளைப் பட்டியலிட்டார்.

மரபு

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப்புற்றுக்கு 5 முதல் 10 சதவிகிதம் மரபு காரணமாகிறது. தாய், தந்தை வழி உறவுகளில் மார்பக அல்லது கருப்பைப் புற்றால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அந்தப் பெண்களுக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அமையலாம். 20, 30, 40 என எந்த வயதிலும் மார்பகப்புற்று வளர ஆரம்பிக்கலாம். எனவே, இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

வாழ்க்கைமுறை

வாழ்க்கைமுறைக் காரணங்களால் மார்பக மற்றும் கருப்பைவாய்ப் புற்றுநோய் ஏற்பட 25% வாய்ப்புள்ளது. கூடுதல் உடல் எடை, கொழுப்பிலிருந்து உருவாகும் கூடுதல் ஈஸ்ட்ரோஜென் ஆகியவை கேன்சருக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். உடல் எடை அதிகம் உள்ள பெண்களுக்கு டைப் 2 டயாபட்டீஸ் ஏற்படும். இவர்களுக்கு கேன்சர் வருவதற்கான ரிஸ்க் அதிகமாகும். எனவே, சரிவிகித உணவு, உடற்பயிற்சி, உயரத்துக்கு ஏற்ற எடையைத் தக்கவைத்துக் கொள்வது என்று பெண்கள் தங்கள் ஆரோக்கியத்துக்கான பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாதவிடாய்

பெண்கள் பூப்படைதல், தாய்மை அடைதல் மற்றும் மெனோபாஸ் காலகட்டங்களில் அவர்களது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன் சுரப்பில் ஏற்படும் மாற்றமும் மார்பகப்புற்றுக்குக் காரணமாக அமையலாம். குறிப்பாக, 10, 11 வயதுகளில் அதிவிரைவாகப் பூப்படையும் குழந்தைகள், 35 வயதுக்குமேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்க்கும் பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ளாதவர்கள், திருமணமே செய்துகொள்ளாதவர்களுக்கு எல்லாம் மார்பகப் புற்றுக்கான வாய்ப்புகள் அதிகம்.

மற்ற உடல் பிரச்னைகள்

மார்பகப்புற்றுக்கு 25% வாய்ப்பு மகப்பேறு தொடர்பான பிரச்னைகளால் ஏற்படுகிறது என்பதால், மாதவிடாய், மகப்பேறு சார்ந்த பிரச்னை உள்ள பெண்கள், முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு வயதில் வேறு ஏதேனும் சிகிச்சை காரணங்களுக்காக மார்பகத்தில் ரேடியேஷன் தெரபி கொடுக்கப்பட்டிருந்தால், அது பின்னாளில் மார்பகப்புற்றுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

பி.ஆர்.சி.ஏ 1, பி.ஆர்.சி.ஏ 2 ஆகிய ஜீன்கள் எல்லோருக்கும் இருக்கும். இந்த ஜீன்களில் ஏற்படும் அபரிமிதமான மாற்றங்கள் மார்பகப் புற்றுநோய் ஏற்பட 60% காரணமாகின்றன. மேலும் இது சினைமுட்டைப் பையிலும் புற்றை ஏற்படுத் தலாம். இவையெல்லாம் அபாய அறிகுறிகளாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும், 60% புற்றுநோய் பாதிப்புக்கான காரணத்தை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எனவே, சுயபரிசோதனை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை பெண்களுக்கு அவசியம்.”

Leave a Reply