மாதிரி வீட்டை பார்த்து மயங்கி விட வேண்டாம்

ரந்து விரிந்த மனையில் அடுக்ககம் ஒன்று எழப்போகிறது. அங்கே ஒரு அடுக்குமாடி வீடு வாங்கலாமென்று நினைக்கிறீர்கள். ஆனால், மனதில் ஒரு நெருடல். ‘கட்டுநர்கள் குறிப்பிடும் அளவுகளில் உருவாகவிருக்கும் வீடு என் மனதுக்கு ஏற்ற வகையில் இருக்குமா?’

“இந்தத் தயக்கமே உங்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்குத்தான் ஒரு மாதிரி வீட்டை ஏற்கெனவே கட்டி வைத்திருக்கிறோம். அதைப் பாருங்கள் அதன்படிதான் உங்கள் வீடும் அமையும்’’ என்று கூறுவார்கள் அவர்கள்.

சந்தோஷத்துடன் செல்வீர்கள். அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மாதிரி வீட்டைப் பார்த்ததும் உங்கள் மனம் உற்சாகப் பெருக்கில் துள்ளும். ‘இது… இதுதான் என் கனவு இல்லம்’ என்று பூரிப்புடன் முன்பணத்தைச் செலுத்துவீர்கள். தவணைகளில் ‘பின் பணத்தையும்’ கட்டுவீர்கள். உங்கள் வீடு இறுதி வடிவம் பெற்ற பிறகு அதைப் பார்க்கும்போது திகைப்பு, அதிர்ச்சி போன்ற பல உணர்வுகள் உண்டாகும். “நான் பார்த்த ‘மாதிரி வீட்டு’க்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே’’ என்ற பதைபதைப்பு தோன்றும்.

“என்ன சொல்றீங்க? அதே அளவுதான். அந்தந்த அறைகள் அதே பகுதிகளில்தான் இருக்கிறன்ன’’ என்று எரிச்சல் பொங்கக் கூறுவார் பிரமோட்டர்.

“நாம் எப்படி ஏமாற்றப்பட்டோம், தெரியவில்லையே’’ என்று நீங்கள் குழம்பக் கூடும். நீங்கள் பார்க்கும் மாதிரி வீடு தரைப்பகுதியில் அமைந்திருக்கும். சுற்றிலும் நீரூற்று, நந்தவனம் என்று ஜமாய்த்திருப்பார்கள். இந்தச் சூழல் காரணமாக அதை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பவர்கள் மனம் பரவசத்தில் திளைக்கும். ஆனால், மாடித்தளத்தில் எழும்பும் உங்கள் வீட்டில் வெளிப்புற இணைப்புகள் இல்லாதுபோக உங்கள் கனவு பலூனில் ஊசி செருகப்படும்.

மாதிரி வீட்டை அமைக்கும்போது அதில் பல தந்திரங்கள் செயல்படுத்தப்படும். அங்குள்ள அறைக்கலன் (Furniture) வழக்கத்தைவிடச் சிறியவையாகவே இருக்கும். இதன் காரணமாக சமையலறை உட்பட எல்லா அறைகளுமே பெரிதாகத் தோற்றமளிக்கும்.

மாதிரி வீட்டில் பொருத்தப்படும் மின் விளக்குகள், ஒளியியல் துறையில் மிகுந்த திறமையுள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அந்த விளக்குகள் காரணமாக மாதிரி வீடு எழிலுடன் தோற்றமளிக்கும். மாதிரி வீட்டில் கான்கிரீட் சுவர்கள் இருக்காது. ஜிப்சம் அட்டைகள்தான் பொருத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகச் சுவர்களுக்கு ஒரு தனி அழகு கிடைக்கும்.

அங்குள்ள அறைக்கலன் எல்லாமே அந்த வீட்டுக்கு அழகூட்டும் வகையில் தருவிக்கப்பட்டிருக்கும். அறைகளுக்கு நடுவே கதவுகள் இருக்காது. இதன் காரணமாக வீடு பெரிதாகக் காட்சியளிக்கும். உள் அலங்கார வடிவமைப்பில் திறமைசாலிகள் தங்கள் கைவண்ணத்தை மாதிரி வீட்டில் காட்டியிருப்பார்கள். மேற்படி சிறப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக கழன்றுவிட. உங்கள் வீடு உங்கள் எதிர்பார்ப்பின் அருகில் கூட வராது. கட்டுநரை மட்டுமே இதில் குற்றம் சுமத்தக் கூடாது. நாமும் விழிப்பாக இருக்க வேண்டும். ட்ரெயிலரை மட்டுமே நம்பி ஒரு சினிமாவுக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினால் அது நம் தப்பும்தானே.

நாம் என்ன செய்யலாம்?

மாதிரி வீட்டில் உங்கள் அறைக்கலன்களை மனதில் பொருத்திப் பாருங்கள். உங்கள் சோபா, உங்கள் வாஷிங் மெஷின், உங்கள் ஃபிரிட்ஜ், உங்கள் டி.வி. வீட்டைச் சுற்றியுள்ள இயற்கை அழகுகளையெல்லாம் மனதிலிருந்து நீக்கிவிட்டு வீட்டை மட்டுமே மனதில் கொள்ளுங்கள். கதவுகளையும் தடுப்புகளையும், அலமாரிகளையும் உரிய இடங்களில் பொருத்திவிட்டு (மனதில்) காட்சி வடிவங்களை உருவாக்குங்கள்.

மாதிரி வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் அழகிய, விலை உயர்ந்த ஓவியங்கள் எல்லாம் நம் வீட்டில் இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள். வீடு என்பது பலருக்கும் வாழ்வில் ஒருமுறை கட்டப்படுவதுதான். எனவே, தந்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல் தெளிவாக யோசித்து முடிவெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *