shadow

மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து மந்திரம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ராக் பாடகி அலானிஸ் மோரிஸ்ஸெட் (Alanis Morissette) ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார். பேச்சுவாக்கில் அவர் சொன்ன ஒரு வாசகம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. “கெஞ்சிக் கேக்குறேன்… அஞ்சே அஞ்சு நிமிஷம் எனக்கு மன அமைதி வேணும்’’ என்பது அந்த வாசகம். உலகமறிந்த ராக் பாடகி… செல்வத்துக்கோ புகழுக்கோ குறைவில்லை… ஆனால், எந்த அளவுக்கு அவர் மன வேதனை அடைந்திருந்தால், மன அமைதி வேண்டும் என்று கேட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து மந்திரம் வசப்பட்டால் போதும்… எதிலும், எங்கும் வெற்றியே! ஆனால், எல்லோருக்கும் எளிதாக அது வாய்ப்பதில்லை. பரபரப்பான மனம்கொண்ட ஒருவரைவிட, மன அமைதியுள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார். தினமும் கொஞ்ச நேரத்தை, மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்… உங்களால் எவ்வளவு அற்புதமாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள். இதை எளிமையாகச் சுட்டிக்காட்டும் கதை இது.

நம் ஊரில் வயற்காட்டுக்கு நடுவே பெரும்பாலும் சோளக்கொல்லை பொம்மைதான் இருக்கும். அரிதாக, சில இடங்களில் கீற்றுக்கொட்டகை போட்டிருப்பார்கள். அதுவும் கரும்புப்பாகு காய்ச்ச, கிணற்று மோட்டாரைப் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட நிலத்தின் சொந்தக்காரருக்கான பிரத்யேக வசதிக்காக அது போடப்பட்டிருக்கும். ஆனால், அமெரிக்க விவசாயிகள் அப்படி அல்ல. தங்கள் வேளாண் நிலங்களுக்கு நடுவே ஒரு சிறிய கட்டடத்தையே கட்டிவைத்திருப்பார்கள். அதை, ஒரு பெரிய தகர கூரை ஷெட் என்று சொல்லலாம். அதில் கால்நடைகளையும் தானியங்களையும் பாதுகாத்து வைப்பார்கள். அதற்குப் பெயர் `பார்ன்’ (Barn). அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை.

அவர் ஒரு விவசாயி. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு வாட்ச் கட்டியிருந்தார். அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல… சென்டிமென்ட். பல நல்ல தருணங்கள், விஷயங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம்தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒருநாள் பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார்… அவர் கையில் கட்டியிருந்த வாட்ச்சைக் காணவில்லை. உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் (Barn) போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.

அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. “டேய்… பசங்களா!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள். ”இந்தக் கிடங்குக்குள்ள என் வாட்ச் காணாமப் போயிடுச்சு. கண்டுபிடிச்சுக் குடுக்குறவங்களுக்கு அருமையான பரிசு ஒண்ணு தருவேன்” என்றார். மாணவர்கள் துள்ளிக்குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள்.

அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் வாட்ச் கிடைக்கவில்லை. சோர்ந்துபோனவர்களாக வெளியே திரும்பிவந்தார்கள். விவசாயியிடம், “மன்னிச்சுக்கங்க ஐயா, எங்களால கண்டுபிடிக்க முடியலை’’ என்றான் அவர்களில் ஒருவன். அவருக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான்.

“ஐயா, எனக்கு மட்டும் இன்னொரு சான்ஸ் தர்றீங்களா? நான் அந்த வாட்ச் கிடைக்குதானு முயற்சி செஞ்சு பார்க்குறேன்’’ என்றான்.

அவர், அவ்வளவு நேரம் அந்தச் சிறுவர்கள் சிரத்தையோடு வாட்ச்சைத் தேடியதைப் பார்த்திருந்தார். இன்னொரு சான்ஸ் கேட்கிறான் இந்தச் சிறுவன். கொடுத்தால் என்ன குறைந்துவிடப் போகிறது? “சரி…” என்றார்.

சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக்கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்தான். அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் வாட்ச் இருந்தது. அவருக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.

“தம்பி… நீ மட்டும் எப்படி சரியா வாட்ச்சைக் கண்டுபிடிச்சே?’’ என்று கேட்டார்.

“ஐயா… நான் உள்ளே போய் ஒண்ணுமே செய்யலை. கிடங்குக்கு நடுவுல கண்ணை மூடி உட்கார்ந்துக்கிட்டேன். அஞ்சு நிமிஷம் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில கடிகாரத்தோட `டிக்…டிக்… டிக்…’ சத்தம் கேட்டுச்சு. சத்தம் வந்த திசைக்குப் போனேன். கண்டுபிடிச்சேன். எடுத்துட்டு வந்துட்டேன்.’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *