பொருளாதார சரிவுக்கு அருண்ஜெட்லியே காரணம்: யஷ்வந்த் சின்ஹா

இந்திய பொருளாதாராம் மிகவும் பின்தங்கிய நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் அதற்கு காரணம் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எனவும் தனியார் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கட்டுரையில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்படுத்தியுள்ள பொருளாதார குழப்பம் குறித்து இப்பொழுதும் பேசவில்லை என்றால் அது இந்த தேசத்திற்கு செய்யும் பெரிய துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு பிறகும், தனியார் முதலீடுகள், நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாதிப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு பெரிய பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமான தொழில், விவசாயம், ஏற்றுமதி துறை என அனைத்து தொழில் பிரிவுகளும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பொருளாதார சீரழிவு என அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.7% என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணக்கீடு, பணமதிப்பிழப்புக்கு பிறகு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது எனவும், பழைய முறைகளின் படி கணக்கிட்டால் ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான பொருளாதார வளர்ச்சி வெறும் 3.7% மட்டுமே எனவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் பொய்களை முழக்கங்களாக வெளியிட்டு ஓட்டுகளை வாங்கினாலும் அந்த முழக்கங்கள் எல்லாம் நிஜத்தில் நிறைவேறவில்லை எனவும் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். மேலும் இந்த பொருளாதாரா வீழ்ச்சி மற்றும் பொருளாதார மந்த நிலையால் 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல எனவும் யஸ்வந்த் சின்ஹா அவருடைய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பொருளாதார சிக்கல்கள் குறித்தும் மோடி மற்றும் அருண் ஜேட்லியின் நடவடிக்கைகள் குறித்தும் பல பாஜக தலைவர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதனை குற்றச்சாட்டுகளாக தெரிவிக்க அவர்கள் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *