பெண்கள் வாழ்க்கை பாதையில் சந்திக்கும் சோதனைகள் ஏராளம்

முந்தைய காலத்தில் மகளிர் நிலை, இன்று மகளிர் வாழும் நிலை, நாளை மகளிர் மேலும் முன்னேற்றம் கண்டு வாழ நினைக்கும் நிலை என்ற எண்ணமும் அதற்கேற்ற செயல் முறைகளும் வழக்கத்தில் உள்ளன. பத்து வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்றைய மகளிர் நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைவருக்கும் விளங்கும். பெண்களின் இந்த முன்னேற்றத்திற்கு எத்தனையோ கோடான கோடி ஆண்களின் ஆதரவும், அக்கறையும், உழைப்பும் இருந்துள்ளது. அவை தொடர்கின்றது.

முன்னேற்றங்களை எண்ணி பெருமைபட்டாலும், பெண்களுக்கு நடக்கும் சில நிகழ்வுகள் காலத்தால் மறைய முடியாத வடுக்களை மனதில் தோற்றுவிக்கின்றன. கோடு காண்பித்தால் ரோடே போட்டு விடும் திறமையைக் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் சில அநீதிகள் பெண்ணுக்கு எங்கு நடந்தாலும் மனம் பாதிக்கப்படுகின்றாள். வெகுண்டு எழுகின்றாள். ஆயிரம் முன்னேற்றங்கள் அவள் தன் சொந்த முயற்சியினால் பெற்றாலும் தன் குடும்பம் என்பதுதான் அவளது மூச்சு என்பது பெண்ணின் ரத்த அணுவில் பிரிக்க முடியாத ஒன்று. ஆகவேத்தான் அவள் இன்னமும் குடத்துள் விளக்காய் இருக்கின்றாள்.

மகளிர் சுயஉதவிகுழு, கல்வி, சொத்துரிமை, பாதுகாப்பு என பல வழிகளில் இன்று ஒரு பெண்ணுக்கு உதவி கிடைக்கின்றது. அவள் காலில் அவள் நிற்க சமுதாயம் வழி வகுக்கின்றது. நன்றி. ஆனால் ஒரு பெண்ணைப் பற்றி கூறும் பொழுது ஆழ்கடலின் ஆழத்தினை அறிந்து விடலாம். ஆனால் ஒரு பெண்ணின் மனதை அறியவே முடியாது என்று கூறுவர். ஏனெனில் வாழ்க்கை பாதையில் அவள் சந்திக்கும் சோதனைகள் ஏராளம்.

இதனைத் தான் முன்னோர் பல புராண பெண்களின் வாழ்க்கையின் மூலமாக கூறியுள்ளனர். ஆக ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாய் அறிய வேண்டுமா? வாருங்கள், வாருங்கள். உங்கள் அம்மா, பாட்டி, மனைவி, அக்கா, தங்கை, சித்தி, பெரியம்மா, அத்தை, தோழி, காதலி என வகைப்படும் உறவுகள் எதுவாக இருந்தாலும் கீழ்கண்ட கேள்விகளை கேட்டுப் பாருங்கள். அவளுள் இருக்கும் மாபெரும் சக்தி உங்களுக்கு புரியும். இந்த நன்னாளில் இம்முயற்சியினை கையாண்டு பெண்ணை அறிய முற்படுவோமா?

* உங்கள் வாழ்வில் நடந்த எந்த நிகழ்ச்சி உங்களை மிகவும் உறுதியானவராக ஆக்கியது?
* எந்த ஒரு நிகழ்வு உங்களை பலவீனமாக்கியது?
* இந்த சூழ் நிலையில் இருந்து தப்பி ஓட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது?
* எந்த ஒரு இடத்தில் நீங்கள் நீங்களாக நிம்மதியாக இருக்க முடிகின்றது?

* இன்றைக்கு நீங்கள் இருக்கும் நிலைக்கு உங்களை உந்தியது எது?
* உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் எந்த ஒன்றினை நீங்கள் முதலில் மாற்றிக் கொள்வீர்கள்?
* நீங்கள் உங்களை எந்த காலத்திற்கு ஒத்துப் போகுபவராக கருதுகின்றீர்கள்? கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என எந்த காலத்தோடு நீங்கள் ஒத்துப் போவீர்கள்?

* நீங்கள் இன்னமும் ஒரு நாள் தான் உயிருடன் இருப்பீர்கள் என்றால் முதலில் என்ன செய்ய முனைவீர்கள்?
* இந்த உலகில் உங்களை நன்கு அறிந்தவர் யார் எனக் கருதுகின்றீர்கள்?
* உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு மிக நெருக்கமானவர் யார்? ஏன்?
* உங்கள் நண்பரின் மிகப்பெரிய நல்ல குணம் என்ன?

* சிறு வயதில் நீங்கள் என்னவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது?
* உங்களுக்கு பிடித்த ‘முன் மாதிரி’ யார்?
* உங்களை பாராட்டினால், புகழ்ந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது இத்தகு செயல்களை மனதில் வெறுக்கின்றீர்களா?
* உங்கள் வெளித் தோற்றத்தில் நீங்கள் எதில் கவனம் செலுத்துகின்றீர்கள்?

* உங்கள் உள் நிலையில் உங்களுக்கு பிடித்த குணம் என்ன?
* ‘கண்டதும் காதல்’ நம்புவீர்களா?
* ‘ஆத்மார்த்த உறவு’ – இதில் நம்பிக்கை உள்ளதா?
* ‘ஜாதகம்’, ஜோதிடம் இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
* உங்களுக்கும் ஒரு காதல் மனதளவில் இருந்ததா?

* ஒருவரை உங்களுக்கு மிகவும் பிடிப்பது எதனால்?
* எது உங்களை அதிகம் பாதிப்பு அடையச் செய்கின்றது.
* எந்த ஒரு கேள்வியை ஆண் சமூகத்திடம் கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
* ஒரு ஆணிடமோ, ஒரு பெண்ணிடமோ எது ஒரு மதிக்கும் அம்சமாக உங்களுக்கு இருக்கும்?

* எதைப் பற்றி இன்னும் ஆழமாக நீங்கள் அறிய வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
* எதனை நீங்கள் செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் ஆசைப்பட்டு அதனை செய்ய முடியாமல் இருக்கின்றீர்கள்?
* ஏன் அதனை செய்ய முடியவில்லை?
* பணம் ஒரு அவசியமில்லை என்றால் எந்த மாதிரியான வேலையை நீங்கள் செய்ய ஆசைப்படுவீர்கள்?
* இன்று உங்களுக்கு வேலை இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?

* கடைசியாக நீங்கள் அழுதது எப்பொழுது?
* கடைசியாக நீங்கள் சிரித்தது எப்பொழுது?
* உங்களின் மகிழ்வான ஞாபகம் என்ன?
* உங்களை மிகவும் சங்கடப்படுத்தியது எது?
* உங்களின் மிகப்பெரிய பயம் என்ன?

* நீங்கள் ஏதாவது ஒரு சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ சட்டத்தினை மீறி இருக்கின்றீர்களா? இதுவரை அப்படி இல்லை என்றால் எந்த சட்டத்தினை மீற நினைக்கின்றீர்கள்?
* எதனைப் பற்றியாவது இப்படி செய்து விட்டோமே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படி பெரிதும் பாதித்தது எது?
* ‘தத்து பித்தென’ செய்த செயல் என்று ஏதாவது இருக்கின்றதா.
* ஒரு அறிமுகமில்லாத புது நபரிடம் பேசுவீர்களா?

* உங்களுக்கு பிடித்த ‘ஜோக்’?
* உங்களுக்கு செல்ல பிராணி பிடிக்குமா? அப்படியானால் எது?
* உங்கள் வாழ்க்கை காலத்தில் பிடித்த காலம் எது?
* உங்களுக்கு பிடித்த மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படாதது எது?
* வாழ்க்கையில் ‘இது இல்லையே’ என எதனை நினைத்து ஏங்குகின்றீர்கள்?

இந்த கேள்விகளை படிக்கும் பொழுது இது என்ன பெண்ணிடம் மட்டும் கேட்க வேண்டியது? பொதுவான கேள்விகள் தானே? ஆணிடமும் கேட்கலாமே என்று தோன்றலாம். கேள்விகள் இரு பாலருக்கும் பொதுவாகப் பொருந்தலாம். ஆனால் இக்கேள்விகளுக்கு அநேக ஆண்களின் பதில்கள் ஒத்து போகலாம், பொதுவாய் இருக்கலாம். மேலோட்டமாய் இருக்கலாம். ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒவ்வொரு பெண்ணின் பதில்களும் தனித்தன்மையுடன் இருக்கும். அதுதான் பெண். அவர்களுக்கு பிறப்பின் அடிப்படையிலேயே இந்த மாறுதல் இருப்பதனை விஞ்ஞானமும் கூறுகின்றது.

ஆக பெண்ணுக்கு அதுவும் இன்றைய பெண்ணுக்கு ஒரு சொல் தான் சொல்ல வேண்டும்.
‘புயல்கள் எப்பவும் தான் உள்ளன. பயப்படாதே
உன் எதிர் நீச்சலை இன்றே கற்றுக்கொள்’
ஆக மீண்டும் இந்த கேள்விகளுக்கான பதிலை ஒரு பெண்ணிடம் கேளுங்கள். பெண்ணைப் பற்றி கொஞ்சம் புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *