shadow

பெண்கள் இந்த முறைகளை பின்பற்றி எடையை குறைக்க வேண்டாம்

அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இதற்காக அவர்கள் பின்பற்றும் தவறான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதனால்தான், உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் பவுடர், எலெக்ட்ரானிக் ஜிம் உபகரணங்கள், ‘ஒரே வாரத்தில் எடை குறைக்க’, ‘இடை மெலிய இரண்டு வார சேலஞ்ச்’ என்று விதம்விதமான உபாயங்கள் பெருகிவருகின்றன. உண்மையில் இவையெல்லாம் பரிந்துரைக்கத்தக்கவையல்ல!

இயற்கையாக உடல் எடையைக் குறைக்க அதிக நாட்கள் தேவைப்படும். உதாரணமாக… உடற்பயிற்சி, தேவையான அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு என்று முயன்று, ஒரு மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது. குறுகிய நாட்களுக்குள் அதிகமாக எடையைக் குறைக்க ஆசைப்பட்டால், அதற்காக மேற்கொள்ளும் இயற்கைக்கு ஒவ்வாத முயற்சிகளின் விளைவுகள், விபரீதத்தையே கொண்டுவந்து சேர்க்கும்.

ஜிம்மில், ‘இந்த எலெக்ட்ரானிக் மெஷினில் எந்த வொர்க் அவுட்டும் செய்யாமல் நின்றாலே போதும். இந்த எலெக்ட்ரானிக் பெல்ட்டை கட்டிக்கொண்டாலே போதும்… அது தானாக உடலில் உள்ள கொழுப்பை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துவிடும். இப்படி தினமும் செய்வதால், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் நாளுக்குநாள் கரைக்கப்படும்.

இதனால் உடல் எடை குறைந்து அழகான உடல் வாகை பெறலாம்’ என்றெல்லாம் ஆசை காட்டுவார்கள். உண்மையில் இதனால் உடல் எடை குறைவதுபோன்றுதான் ஆரம்பத்தில் தோன்றும், போகப்போக முன்பு இருந்த எடையைவிட அதிகரிக்கும் என்பது உண்மை. முன்பைவிட சுறுசுறுப்பு குறைந்து, சாதாரண வேலையைக்கூட செய்யமுடியாத நிலையும் ஏற்படக்கூடும்.

‘எந்த மருந்தாலும், பவுடராலும் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கமுடியாது. சரிவிகித உணவுக் கட்டுப்பாடும், போதிய உடற் பயிற்சியும்தான் ஒருவரது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கும்.

ஜிம்முக்குதான் போக வேண்டும் என்பதில்லை. வாக்கிங், சைக்கிளிங், ஷட்டில், யோகா, ஏரோபிக்ஸ், ஸ்விம்மிங், ஸும்பா என… ஏதாவது ஒன்றை நேரம், சூழல், விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். தரையில் செய்யக்கூடிய ஃப்ளோர் எக்ஸர்சைஸ்களாகத் தேர்ந்தெடுத்து வீட்டில் செய்யலாம்.

வயிறு, பின்பக்கம், தொடை, உடம்பு என்று உடலின் குறிப்பிட்ட பாகங்களில் மட்டும் அதிக எடை கொண்டிருப்பவர்கள், பிரத்யேகப் பயிற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செய்யலாம். இதை ஜிம்மில் டிரெயினரிடம் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே செய்யலாம். தொடர்ந்து ஒருவர் உடற்பயிற்சி மேற்கொண்டு, திடீரென விட்டுவிட்டால் முன்பு இருந்த எடை, மீண்டும் கூடிவிடும். சமயங்களில் அதிக மாகவும்கூட வாய்ப்புள்ளது.

Leave a Reply