shadow

பெண்களின் பெருமை பேசிய பயணம்

சாலையில் ஒரு கார் அடிக்கடி பிரேக் போட்டபடி, வளைந்து நெளிந்து செல்கிறது என்றால் நிச்சயம் அந்த காரை ஒரு பெண்தான் ஒட்டிச் செல்கிறார் எனப் பலர் சொல்லக்கூடும். ஆனால், மீனாட்சி, மூகாம்பிகா, பிரியா ஆகிய மூன்று பெண்கள் கோவையிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன்வரை சுமார் 26 ஆயிரத்தி 800 கி.மீ. தொலைவைக் காரில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

பார்வையை மாற்ற ஒரு பயணம்

கார் பயணங்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர் மீனாட்சி. கோவை மாவட்டத்தில் கார் பிரியர்கள் அதிகமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். 15 வயதிலேயே கார் ஒட்டக் கற்றுக்கொண்டார். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்குத் தனியாகவே இவர் கார் ஓட்டிச் செல்கிறார். கோவையிலிருந்து லண்டனுக்கு காரில் செல்ல வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியவர் மீனாட்சிதான். “நான் எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் அங்கு வாடகை கார் எடுத்து அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வேன். அப்போதுதான் அந்த நாட்டை சுற்றிப்பார்த்த மனநிறைவு கிடைக்கும்.

இந்நிலையில்தான் எனக்கு ஏதாவது ஒரு பெரிய விஷயத்தைச் சாதிக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. இந்தியா என்றால் பழமையான சிந்தனைகள் கொண்ட நாடு எனப் பலரும் நினைக்கிறார்கள். அதேபோல் இந்தியப் பெண்கள் வீட்டுக்குள்ளேதான் இருப்பார்கள், அவர்களின் வேலை மாடு மேய்ப்பது மட்டும்தான் என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது. இதுபோன்ற கருத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன். நம் நாட்டின் எழுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும் இந்தியப் பெண்களின் கல்வி முன்னேற்றம் குறித்துப் பிரச்சாரம் செய்யும் விதமாகவும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன்” என்கிறார்.

தொடங்கியது எப்படி?

இந்தப் பயணத்துக்கான திட்டமிடல் மட்டும் ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார் மீனாட்சி . “என்னிடம் பலர் லண்டன்வரை ஏன் காரில் செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். நம்மை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேயர்களின் முன்னால் நம் நாட்டின் பெருமையையும் இந்தியப் பெண்களின் தைரியத்தையும் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்புதான் இந்தப் பயணம் என்று சொன்னேன்” என்கிறார்.

அதேநேரம் தான் மட்டும் இந்தப் பிரச்சாரத்தைத் தனியாக மேற்கொள்ள முடியாது என்பதற்காக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகம் வழியாக நண்பர்களுக்கு இந்த நெடும் பயணத்துக்குத் தேவைப்படும் பணம், நாட்கள் போன்ற தகவல்களைத் தொகுத்து அனுப்பினார். அதைப் பார்த்து பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகாவும், மும்பையைச் சேர்ந்த பிரியாவும் இவரைத் தொடர்புகொண்டார்கள். சுமார் 72 நாட்கள் பெண்கள் மட்டுமே தனியாக மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ள அவர்கள் உற்சாகமாக இருந்தார்கள்.

கோவையில் இருந்து இந்தியாவின் வட மாநிலங்களின் வழியாக மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளின் வழியாக லண்டன் நகரை அடைவது இவர்களின் திட்டம். அதற்காக அந்தந்த நாடுகளுக்குச் செல்வதற்கான விசா, கார் லைசென்ஸ் ஆகிய ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருந்தார்கள். அதேபோல் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு இவர்கள் வரும் செய்தியை முன்கூட்டியே தெரிவித்துவிட்டார்கள்.

சீனாவில் சிக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இவர்களின் பிரச்சாரம் வெற்றிகரமாகத் தொடங்கியது. இந்தப் பிரச்சார பயணத்துக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் காரை இவர்கள் பயன்படுத்தினர். போகும் வழியில் சில பிரச்சினைகளையும் எதிர்கொண்டு சமாளித்திருக்கிறார்கள்.

மீனாட்சி, மூகாம்பிகா, பிரியா

“சீனாவில் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை காத்திருந்தது. அங்கு காரை ஒட்டிச் செல்ல வேண்டும் என்றால் தற்காலிக லைசன்ஸ் எடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அதிகாரிகள் சொல்ல, என்ன செய்வது எனக் குழம்பினோம். பின்னர் நண்பர்கள், சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியோடு காரை சீனாவின் எல்லைப்பகுதியில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்று தற்காலிக கார் லைசென்ஸ் எடுத்துக்கொண்டு வந்தோம். பொதுவாக இந்த லைசன்ஸ் எடுக்க ஒரு வாரம் ஆகுமாம். ஆனால் எங்களுக்கு ஒரே நாளிலேயே கிடைத்தது அதிர்ஷ்டம்தான்” என்கிறார் குழுவில் ஒருவரான மூகாம்பிகா.

உதவிய சைகை மொழி

இவர்கள் பயணத்தில் கடந்த பல நாடுகளில் மக்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை என்பதால் ஏற்பட்ட சிக்கலையும் புத்திசாலித்தனமாகச் சமாளித்திருக்கிறார்கள். “நம் நாட்டில்தான் ஆங்கில மோகம் அதிகமாக உள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டால் பல நாட்டினர் அவர்களின் தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் பயணம் செய்தபோது எந்த இடத்தில் இருக்கிறோம், அந்த ஊரின் பெயர் என்ன என்பதுகூட தெரியாது. எங்கள் பயணத்திலேயே இணையம் வழியாக ரஷ்ய மொழியைப் படிக்கக் கற்றுக்கொண்டேன். வண்டிக்கு டீசல் போட வேண்டும் அல்லது வேறு ஏதாவது அத்தியாவசியத் தேவை என்றால் எங்களுக்கு உதவியது சைகை மொழிதான்.

சைகை மொழியால் பேசிக்கொண்டே லண்டன்வரை சென்றுவிட்டோம். பல இடங்களில் ரொட்டி, வெண்ணெய்தான் சாப்பிடக் கிடைத்தது. ஆனால் நாங்கள் சென்ற நாடுகளில் உள்ள மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றார்கள். இந்தியப் பெண்கள் இவ்வளவு தூரம் அதுவும் தனியாக பயணம் செய்து வந்தது அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. எங்களுடன் பலர் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் கையில் இருந்த பொருட்களை எங்களுக்குப் பரிசாகக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்கள்” என மகிழ்ச்சியுடன்சொல்கிறார் மீனாட்சி.

மறக்க முடியாத அந்தநாள்

சாலை, மலை, குளிர் ஆகியவற்றைக் கடந்து கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி இவர்கள் வெற்றிகரமாக லண்டன் நகரைச் சென்றடைந்துள்ளனர். “நாங்கள் திட்டமிட்டபடி சரியாக 72 நாட்களிலேயே லண்டனை அடைந்துவிட்டோம். ஒரு நாளைக்கு 500 கி.மீ. எனத் திட்டமிட்டு காரை ஓட்டி வந்தோம். எங்களுடைய பயணத்தில் ஒரு இடத்தில்கூட காரின் டயர் பஞ்சர் ஆகவில்லை என்பது அதிசயம்தான். பல சிரமங்களைக் கடந்து இறுதி நாளில் லண்டனை நம் நாட்டுக் கொடியுடன் அடைந்தபோது எங்கள் மூவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கண்களில் ஆனந்தக் கண்ணீருடனும் மகிழ்ச்சிப் புன்னகையுடனும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டோம்” என்கின்றனர் மீனாட்சியும் மூகாம்பிகாவும்.

இந்தச் சாதனையின் மூலம் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்த மூன்று பெண்களும் நிரூபித்துவிட்டனர்!

Leave a Reply