shadow

பினாயில் பாட்டி!

8உடல் உழைப்புக்கு வயது தடையில்லை என்பதற்கு இன்னுமோர் உதாரணம் பேச்சியம்மாள். தேனி அருகே இருக்கும் பழனிசெட்டிப் பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள், 60 வயதைக் கடந்தவர். தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் சொந்தக் காலில் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

தான் தயாரித்த பினாயில், சோப்பு ஆயில் ஆகியவற்றைத் தள்ளுவண்டியில் எடுத்துக்கொண்டு அதிகாலை 4 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புகிறார். கிட்டத்தட்ட 15 கி.மீ சுற்றியலைந்துவிட்டு மாலை 3 மணிக்கு வீடு திரும்புகிறார்.

வறுமை நிரந்தரமாகக் குடியிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பம் போல அவரது மனதிலும் காதல் முளைவிட்டது. வழக்கம் போல இருவர் வீட்டிலும் எதிர்ப்பு வலுக்க, மனம் நிறைந்தவரையே மணம்புரிவது என்பதில் பேச்சியம்மாள் உறுதியுடன் நின்றார். தான் காதலித்த சுந்தரராஜை அதே உறுதியுடன் கரம் பிடித்தார். கொத்தனார் வேலை செய்து கணவன் கொண்டுவரும் சொற்ப வருமானத்தில் கட்டுசெட்டாகக் குடும்பம் நடத்தினார் பேச்சியம்மாள்.

வாழ்வை மாற்றிய விபத்து

ஒரே மகள் சீதாலெட்சுமியைச் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தவருக்கு விபத்து வடிவில் சோதனை வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேச்சியம்மாளின் கணவர் ஒரு விபத்தில் சிக்கி, வேலைக்குப் போக முடியாதபடி வலது கை செயலிழந்துவிட்டது. வெளியுலகமே தெரியாமல் இருந்த பேச்சியம்மாளுக்குக் கணவனின் இந்த நிலை பேரிடியாக இருந்தது. அதற்காக உடைந்து உட்காரவில்லை. அடுத்து என்ன என்று யோசித்தார். குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல முடிவு செய்தார்.

“இந்தக் காலத்துல வயசு புள்ளைகளுக்கே வேலை கிடைக்கறது குதிரை கொம்பா இருக்கு. வயசான கிழவிக்கு யாரு வேலை கொடுப்பாங்க?” என்று தான் எதிர்கொண்ட புறக்கணிப்பை வார்த்தைகளாக்குகிறார் பேச்சியம்மாள். வேலை கிடைக்கவில்லை என்பதற்காக வீட்டுக்குள் முடங்கிப் போகவில்லை. சுய உதவிக் குழுவில் இருந்து தன் மகள் கற்றுக்கொண்ட பினாயில் தயாரிப்பைக் கையில் எடுத்தார். மகளிடம் பாடம் கற்று அதையே தன் அடையாளமாக மாற்றினார்.

தன் கையே தனக்குதவி

தான் தயாரித்த பினாயில், சோப்பு ஆயில் பாட்டில்களைத் தலையில் சுமந்தபடி சுற்றியிருக்கும் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார். கண்ணைக் கவரும் விளம்பரங்களுக்கு மத்தியில் கிராமத்து மூதாட்டியின் வீட்டுத் தயாரிப்பு எடுபடுமா? யாரும் வாங்கவில்லை என்பதற்காகப் பேச்சியம்மாள் நம்பிக்கை இழக்கவில்லை.

“பொருளு விக்கிறதோ இல்லையோ நான் தினமும் கிளம்பிடுவேன். என்கிட்டே வாங்கின பினாயில் நல்லா இருக்குதுன்னு சிலர் என்கிட்டேயே தொடர்ந்து வாங்கினாங்க. அவங்களைப் பார்த்து அடுத்தவங்களும் வாங்க, என்கிட்டே வாங்குறவங்க எண்ணிக்கை அதிகமாச்சு.

இப்போல்லாம் தெருத் தெருவாக நான் போயி கத்துறதுக்கு முன்னாடியே வீதியில விளையாடுற குழந்தைங்க, ‘பினாயில் பாட்டி’ வந்திருக்காங்கன்னு சொல்லிடுறாங்க” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் பேச்சியம்மாள்.

வாழ்வை வெல்லும் உறுதி

வயதான காலத்தில் தலைச்சுமையோடு 15 கி.மீ நடப்பதற்கு முடியாததால் சிறுவாட்டுப் பணத்துடன் கடன் பெற்றுப் பத்தாயிரம் ரூபாயில் தள்ளுவண்டி வாங்கியிருக்கிறார்.

“முதல்ல தினமும் 10 பாட்டில் விக்கிறதே பெரிய சவாலா இருக்கும். ஆனா இப்போ ஐம்பது பாட்டிலுக்கு மேல வித்துடுவேன். செலவு போக முந்நூறு ரூபாய் வரைக்கும் கையில நிக்குது” என்று கச்சிதமாகக் கணக்கு சொல்கிறார் பேச்சியம்மாள். இந்த மகிழ்ச்சிகூட இவரது வாழ்வில் நீடிக்கவில்லை. இவருடைய மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மருமகனே கொன்றுவிட, திக்குத் தெரியாமல் தவித்து நின்றார்.

“கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்தின பொண்ணைப் பறிகொடுத்துட்டேனேன்னு அழறதா? பெத்த தாயை இழந்துட்டு நிராதரவா இருக்குற என் பேரக் குழந்தைகளுக்காக அழறதா?” என்று கண்களில் கூடுகட்டும் கண்ணீரை மறைத்தபடி பேசுகிற பேச்சியம்மாளின் வார்த்தைகள், கேட்கிற யாரையும் கலங்கச் செய்துவிடும்.

“என் பேரப்பசங்க ரெண்டு பேரையும் நான்தான் படிக்க வைக்கிறேன். மூத்தவன் மனோஜ் பத்தாவதும், இளையவன் வினோஜ் ஒன்பதாவதும் படிக்கறாங்க. அதுங்க வாழ்க்கை சீர்பட்டா எனக்கு அதுவே போதும்” என்று சொல்லிவிட்டுத் தள்ளுவண்டியைத் தள்ளியபடி செல்கிறார் பேச்சியம்மாள். எப்பாடுபட்டாவது வாழ்வை வென்றுவிடும் உறுதி வெளிப்படுகிறது அவரது நடையில்!

Leave a Reply