பாவத்தில் இருந்து விடுபட ஜெயலலிதாவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு. டாக்டர் ராமதாஸ்

ramdossதமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து பாவம் செய்த ஜெயலலிதாவுக்கு அந்த பாவத்தில் இருந்து விடுபட கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாமக நிறுவனர் ராம்தாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 14-வது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஆளுனர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது. பேரவைத் தலைவர் தொடங்கி ஆளுனர் வரை ஜெயலலிதாவை புகழப்போவதைத் தவிர ஆக்கப்பூர்வமாக வேறு எதுவும் இக்கூட்டத் தொடரில் நடைபெறப் போவதில்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் நினைத்தால் கடந்த 5 ஆண்டுகளாக செய்த பாவங்களுக்கு பரிகாரமாக  சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு, சில சிறந்த சட்டங்களை இயற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2011&ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மக்கள் நன்மைக்காக செயல்படுத்திய திட்டம் என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ள ஒன்று கூட இல்லாதது மிகப்பெரிய சோகம் தான். ஆனால், மக்களை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். குறிப்பாக ஊழலும், மதுவும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களை பாடாய்படுத்தி உருக்குலைத்து விட்டன.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா அரசு கவலைப்படவில்லை. அனைத்து விதிமுறைகளையும் மீறி தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறப்பது, 4 வயது குழந்தைக்கு கூட மது புகட்டப்படுவதற்கு காரணமாக இருப்பது என அனைத்து சீரழிவுகளுக்கும் தமிழக அரசு உற்ற துணையாக இருக்கிறது.

எந்த தவறு செய்தவர்களுக்கும் பாவ மன்னிப்பு உண்டு என்பதைப் போல ஊழலுக்கும், மதுவுக்கும்  துணை போன அ.தி.மு.க. அரசு அந்த பாவத்திலிருந்து விடுபட்டு பரிகாரம் தேடிக்கொள்ள கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த இரு தீமைகளையும் நிரந்தரமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் அந்த பரிகாரம் ஆகும். அதன்படி, தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்க வேண்டும்; இதே கூட்டத்தொடரில் லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு செய்தால் பதவியிலிருந்து விலகும் போது பாவத்தின் சுமையில் ஓரளவையாவது இறக்கி வைத்துவிட்டு செல்லலாம். இல்லாவிட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி விரட்டியடிக்கப்படுவது உறுதியாகிவிடும்” என்று கூறியுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *