shadow

healthஉண்டி கொடுத்தல்; உயிர் கொடுத்தல்’ என உணவைச் சிறப்பித்த மரபு நமது. உடலின் அடிப்படை வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் நிகழ்வதற்கும், தாதுக்கள் வளர்ச்சிக்கும் அதி முக்கியமானது உணவுதான். சரியான நேரத்துக்கு, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியமானது, எந்த உணவை எதனுடன் சேர்த்து உண்ண வேண்டும் என்று தெரிந்திருப்பதும். உணவை முறையாக உட்கொண்டால், அது அமிர்தம். தவறான உணவுகளின் சேர்க்கை நஞ்சு.

பாலுடன் தவிர்க்க வேண்டிய பிற உணவுகள்

பொதுவாகவே, மீனில் புரதம், அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளன. கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற எண்ணற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மீன் ஒரு சிறந்த உணவு.

இவ்வளவு சத்துகளைக்கொண்ட மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.

கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

பப்பாளி மற்றும் தண்ணீர்

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ள பப்பாளி, பார்வைக்குறைபாடுகளுக்கு, மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கு, முகப்பொலிவுக்கு எனப் பலவற்றுக்குத் தீர்வாக உள்ளது. பப்பாளி சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை ஏற்படும்.

பால் கலந்த ஓட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது, ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது தவறு. ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச்செய்யும் நொதிகளை, ஆரஞ்சு ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் அழித்துவிடும். மேலும், ஆரஞ்சில் உள்ள அமிலம், பாலைத் திரிக்கச் செய்வதுடன் உடலில் சளியின் தேக்கத்தையும் அதிகரிக்கும்.

தேன்

தேனைச் சூடுபடுத்தி உட்கொள்ளக் கூடாது. அதன் இயற்கைத்தன்மை அழிந்துவிடுவதால், நம் உடலில் நாட்பட்ட நோய்கள் உண்டாக வாய்ப்பு ஏற்படும். அதேபோல், தேனையும் நெய்யையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் தேவை இல்லாத கழிவுகள் சேர்ந்து, பலவிதமான உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

பழங்கள்

பொதுவாக, ஃப்ரூட் சாலட் போன்றவற்றைச் சாப்பிடும்போது, இனிப்பு மற்றும் புளிப்பான பழங்களைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இவற்றைச் சாப்பிடும்போது பித்தம் மற்றும் கபத்தின் அளவில் மாற்றம் ஏற்படும்.

அசைவம்

கோழி மற்றும் மீன் இரண்டையும் பால் மற்றும் எள்ளுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலின் மிக நுண்ணியத் துளைகள் கெட்டு, உடல்நலக் கெடுதல் உண்டாகலாம்.

சமைத்த உணவுகளுடன் சமைக்காத உணவுகளைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் இதுபோன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

Leave a Reply