பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பா? ஜிகே வாசன் விளக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் தனது கட்சியை இணணக்க உள்ளார் என்ற வதந்தி ஒரு சில நாட்களாக இருந்து வருகிறது. இதற்கு பதிலாக அவருக்கு பாஜக தமிழக தலைவர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்தித்தார், 45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் பாஜக உடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்

அதிமுக பாஜக கூட்டணியில் தமாகா இணைந்ததால் இந்த சந்திப்பு நடந்தது என்றும், இந்த சந்திப்பின்போது தமிழ் வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்து பிரதமரிடம் தெளிவாக எடுத்துக் கூறியதாகவும், கல்வி விவசாயம் தொழில் வேலைவாய்ப்பு மற்றும் தமிழுக்கான முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமருடனான இந்த சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமானது என்றும், இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டதாக தான் பிரதமரிடம் தெரிவித்ததாகவும், வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் பிரதமரிடம் தான் கூறியதாகவும் ஜிகே வாசன் கூறியுள்ளார்.

ஜிகே வாசனின் இந்த பேட்டியை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் இனி என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

Leave a Reply