shadow

பல் துலக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

பல் ஆரோக்கியத்துக்கு ஈறுகள் எப்போதும் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். பற்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை ஈறுகள். இவை தேய்ந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமானவை இவை:

கடின வகை (Hard tooth brush) பல்துலக்கியைப் பயன்படுத்தித் துலக்கினால், ஈறுகள் சீக்கிரத்தில் தேய்ந்துவிடும். மென்மை (Soft) அல்லது நடுத்தர வகை (Medium) பல்துலக்கியைப் பயன்படுத்தும்போதும், மென்மையாகவே பற்களைத் துலக்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்துத் துலக்கினாலும், அதிக நேரம் துலக்கினாலும், வேகவேகமாகத் துலக்கினாலும் ஈறுகள் தேய்ந்துவிடும். கரி, உப்பு, மண், செங்கல் பொடி, சாம்பல், நெல் உமி, மரக்குச்சி போன்றவற்றால் பல் துலக்கும்போதும், இதே நிலைமை ஏற்படுவதுண்டு. வெற்றிலை, பாக்கு, புகையிலை, புகைபிடித்தல் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கங்களால் பற்களில் கறை படிந்து, நாளடைவில் ஈறுகளும் பழுதாகித் தேய்ந்துவிடும்.

மற்ற நோய்களும் காரணம்

உங்களுடைய அடுத்த பிரச்சினை ஈறுகளில் ரத்தக்கசிவு. பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது, பல் இடுக்குகளில் உணவுத் துகள்கள் அடிக்கடி தங்குவது, குச்சி, குண்டூசி போன்றவற்றால் ஈறுகளைக் குத்தி அழுக்கை அகற்றுவது போன்ற காரணங்களால் கிருமித்தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கிவிடும்; சீழ் பிடித்து வலிக்கும். நாளடைவில் அந்த ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். வாய்நாற்றம் ஏற்படும். ‘ஹீமோபிலியா’, ரத்தப் புற்றுநோய், வைட்டமின் சி குறைபாடு காரணமாக வரும் ‘ஸ்கர்வி’ (Scurvy) போன்ற நோய்கள் காரணமாகவும் ஈறுகளில் ரத்தம் கசியலாம். ஆனால், இப்படியான ரத்தக்கசிவு வெகு அரிதாகவே நிகழும்.

ஈறுகள் தேய்வது மட்டுமில்லாமல் பற்கள் ஆழமாகத் தேய்ந்துபோனாலும், பல்லில் கூச்சம் ஏற்படும். உங்கள் பல்லில் சொத்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளீர்கள். இந்தச் சொத்தையானது பல்லின் பக்கவாட்டில் இருந்தால், அது பல் கூச்சத்துக்கு வழி அமைத்துவிடும். உங்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. அவை இருந்தாலும் உங்கள் பிரச்சினைகள் தீராத தொல்லைகளைத் தரும்.

நேரடி ஆய்வு

உங்களைப் பொறுத்த அளவில் பல் மருத்துவரை நேரில் சந்திக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் உங்களின் பல் ஆரோக்கியம், ஈறுகளின் நிலைமையைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற முடியும். ஈறுகளை வலுப்படுத்த அறுவைசிகிச்சை உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் எந்த சிகிச்சை உங்களுக்குப் பொருந்தும் என்பதைப் பல் மருத்துவர்தான் தேர்வுசெய்ய வேண்டும். உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் இருந்தால் அவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். பல் கூச்சத்துக்கு அதற்கென உள்ள பற்பசையைப் பயன்படுத்தினால், அது தற்காலிகமாக விடைபெற்றுக் கொள்ளும். பல் சொத்தையை சரி செய்தால், அது நிரந்தரமாகத் தீர்ந்துவிடும். ‘வேர் சிகிச்சை’ எனப்படும் ‘ரூட் கெனால் சிகிச்சை’ (Root canal treatment) மூலம் சொத்தைப் பல்லை முழுவதுமாக அடைத்துவிட முடியும்.

துலக்கும் முறை

பல் சுத்தம் பற்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. பல் மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களுக்குப் பொருத்தமான பற்பசையைத் தேர்ந்தெடுத்து, மென்மையான பல்துலக்கியைக் கொண்டு பல் துலக்குங்கள். காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒருமுறை என இருமுறை பல் துலக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குப் பல் துலக்குவது நல்லது. பல்துலக்கியை 45 டிகிரி கோணத்தில் பிடித்துக்கொண்டு, மேல் தாடைப் பற்களை மேலிருந்து கீழும், கீழ்த் தாடைப் பற்களைக் கீழிருந்து மேலும் வட்டச் சுழற்சியில், மிதமான அழுத்தம் கொடுத்து பல் துலக்க வேண்டும். பற்களின் வெட்டும் பரப்புகளை முன்னும் பின்னுமாகத் துலக்க வேண்டும். நாக்கைச் சுத்தப்படுத்தத் தனியாக ‘வழிப்பான்’ தேவையில்லை. பல்துலக்கியைக் கொண்டே நாக்கைச் சுத்தப்படுத்தலாம்.

ஃபிளாஸ்ஸிங் தெரியுமா?

மேற்கண்ட வகையில் பல் துலக்கும்போது பல்லின் முன்புறம், மேல்புறம், உட்புறம் மட்டுமே சுத்தப்படுத்த முடியும். இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள பகுதிகளில் பல்துலக்கியின் இழைகள் நுழையாது. ஆனால், அங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக்கொள்ளும். அவற்றை குண்டூசி கொண்டு அகற்ற உங்களைத் தூண்டும். இதற்கு பதிலாக, பற்களை ஃபிளாஸ்ஸிங் (Flossing) செய்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ‘டென்டல் ஃபிளாஸ்ஸிங் நூல்’ ஒன்றை வாங்கி, இரு பற்களுக்கு இடையில் இதைச் செலுத்தி, மேற்தாடைப் பற்களை மேலிருந்து கீழும், கீழ்த்தாடைப் பற்களைக் கீழிருந்து மேல்நோக்கியும் மெதுவாக இழுக்கும்போது, அங்குள்ள உணவுத்துகள்களும் அழுக்குகளும் எளிதாக வெளியேறிவிடும். ஈறுகள் பாதிப்படைவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

அடுத்து, பற்களில் காரை படியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கு வெற்றிலை, பாக்கு போடும் பழக்கத்தைக் கைவிடுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் பழக்கத்தைக் மேற்கொள்ளுங்கள். பற்களில் ஏற்படுகிற பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். சிகிச்சைக்கு ஆகும் செலவுகளையும் குறைத்துவிடலாம்

Leave a Reply