பருவத்தே பணம் செய்: சிறந்த நிறுவனம் எது

தரகு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்? முதலாவது நீங்கள் தேர்வு செய்யப் போகும் பங்குச் சந்தை நிறுவனம் நல்ல அனுபவம் கொண்டதாக இருக்க வேண்டும். அனுபவம் என்பது பங்குச் சந்தையில் அடிப்படையான விஷயம். ஒரு தரகு நிறுவனம் எவ்வளவு ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த நிறுவனத்தின் செயல்பாடும் இருக்கும். உங்கள் முதலீடு சரியானதாக இருக்கிறதா, இதைவிடச் சிறப்பான முதலீட்டு வாய்ப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதையெல்லாம் சொல்லி, நமக்கு வழி காட்டுபவர்களாக இருக்க வேண்டும். அந்த அனுபவம் முக்கியம்.

அடுத்தது அதீதமாக ஆலோசனை சொல்லும் நிறுவனத்தைத் தேர்வு செய்யாதீர்கள். ஆலோசனைக்கும் அதீத ஆலோசனைக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆலோசனை என்பது தேவையான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டியது. நமக்கு உதவி செய்யக் கூடியது. அதீத ஆலோசனை அவசரமாகச் சொல்லப்பட்டு நமக்கு உபத்திரவம் அளிப்பது. ஆலோசனை என்ற பெயரில் தன் கருத்துகளை நம்மீது திணிக்கும் ஆட்கள் மூலம் தவறான முடிவுகளை எடுக்க வேண்டியதாகிவிடும்.

மூன்றாவதாக நாம் சொல்வதைச் செய்யும் ஆளாக இருக்க வேண்டும். நாம் ஒரு பங்கினைச் சொல்ல, அவர்கள் வேறொன்றை வாங்கி வைக்கும் ஆளாக இருந்துவிடக் கூடாது. தெளிவாகச் செயல்படும் தரகு நிறுவனத்தை முடிவு செய்ய வேண்டும். எந்தத் தரகு நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுடன் எழுத்தில் வரவு செலவு செய்கிறதோ அதுவே சிறந்த நிறுவனம். வாய் வார்த்தையாகப் பேசுவதில் பல நேரங்களில் தடுமாற்றம் வந்துவிடும்.

வாடிக்கையாளர் நலன்

பங்குச் சந்தையில் தள்ளுபடி கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எல்லோருமே கொடுத்து தான் ஆக வேண்டும். சிலர் வாடிக்கையாளரைக் கவர வேண்டும் என்று சலுகைகளைச் சொல்வார்கள். அதெல்லாம் நேர்மையான வழியாக இருக்காது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எந்த வழிகளில் எல்லாம் நமக்கு உதவி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உதவி செய்யக் கூடிய நிறுவனம்தான் நல்ல நிறுவனம்.

தரகு நிறுவனத்தை முடிவு செய்வதில் எல்லாவற்றையும் விட முக்கியமானது, அடிப்படை யானது, வாடிக்கையாளர் நலனில் முழுமையான அக்கறை கொண்ட நிறுவனமாக இருக்க வேண்டும். பல தரகு நிறுவனங்கள் லாப நோக்கத்தை எதிர்பார்த்தே செயல் படுகின்றன. ஏனென்றால் நாம் பங்கை வாங்கி னாலும் அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். நாம் பங்குகளை விற்றாலும் அவர் களுக்கு கமிஷன் கிடைக்கும். அதனால், நம் தலையில் ஏதேனும் பங்குகளைக் கட்டி அவர்கள் லாபம் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். ஆனால், அப்படி இல்லாமல் வாடிக்கையாளரின் நலம் முதன்மையானதாகக் கருதும் நிறுவனமாக தரகு நிறுவனம் இருக்க வேண்டும்.

இப்போது நாம் யாருடைய கையைப் பிடித்துக் கொண்டு பங்குச் சந்தைக் களத்துக்குள் குதிக்க வேண்டும் என்று ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். நம்பிக்கையோடு கணக்கைத் தொடங்கி முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். அதற்கு முன் பங்குச் சந்தை முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்த்து விடலாம். காத்திருங்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *