பணம் அனுப்ப எளிமையான முறைகள்… ஏகப்பட்ட குழப்பங்கள்! பீம் ஆதார் ஆப் எப்படி?

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததில் இருந்தே, இ-வாலட்கள், கார்டு பரிவர்த்தனைகள், இணைய வங்கி சேவை போன்றவைகளின் பயன்பாடு அதிகமானது. பல இ-வாலட் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டன. இதைத்தொடர்ந்து அரசும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. யு.பி.ஐ., USSD வசதி, பீம் ஆப் என பல வசதிகளை அறிமுகம் செய்தது. இவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும், பீம் ஆப்பிற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் அன்று, புதிய பீம் ஆதார் பே வசதியையும், பீம் ஆப் பயன்படுத்துபவர்களுக்கான ஊக்கப்பரிசுகள் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துவைத்தார் நரேந்திரமோடி. ஸ்மார்ட்போன், இணைய இணைப்பு என எதுவுமே இல்லாமள், எளிதாக வணிகர்களிடம் பணம் செலுத்தலாம் என்பதுதான் இந்த வசதியின் ப்ளஸ் பாயின்ட். ஆனால் இதுபற்றி எக்கச்சக்கமான குழப்பங்கள் இருக்கின்றன.

நரேந்திரமோடி

பீம் ஆதார் பே ஆப் என்றால் என்ன?

உங்களுடைய ஆதார் எண்ணை மட்டுமே வைத்துக் கொண்டு பணம் செலுத்தும் வசதிதான் ஆதார் பே. ஆனால் பீம் ஆப் என்பது அப்படியல்ல. பீம் ஆப் ஆனது வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஒரு இ-வாலட் போல செயல்படுவது. பீம் ஆப் மூலமாக நீங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு பணம் அனுப்பவும், வாங்கவும் முடியும். ஆனால் அதற்கு இணையவசதி கொண்ட, ஸ்மார்ட்போன் கண்டிப்பாக தேவை. ஆதார் பே ஆப்பிற்கு இவை தேவையில்லை.

எப்படி வேலை செய்கிறது இந்த ஆதார் பே?

ஒரு வணிகராக நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆதார் பே ஆப்பினை டவுன்லோட் செய்து, உங்களது வங்கி விவரங்களை அதில் பதிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் கைரேகையை ஸ்கேன் செய்வதற்காக பிரத்யேக ஸ்கேனர்களையும் வைத்திருக்க வேண்டும். ஆப் இன்ஸ்டால் செய்யப்பட மொபைல்போன் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் ஆகியவற்றின் மூலம்தான் இந்த பரிவர்த்தனை நடைபெறும். உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக்கணக்குகளின் விவரங்களைக் கொண்டுதான் இது இயங்குகிறது. எனவே வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது.

ஆதார் வசதி கொண்ட பீம் ஆப்

உதாரணமாக உங்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் உங்களுக்கு பில் தொகை செலுத்த வேண்டும் என வைத்துக்கொள்வோம். முதலில் நீங்கள் உங்களுடைய ஆதார் பே ஆப்பில், அவர் செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பிட்டு, வாடிக்கையாளரிடம் காட்ட வேண்டும். அவர் அதனை சரிபார்த்துவிட்டு அவருடைய ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் மூலம், அவருடைய அடையாளம் உறுதி செய்யப்பட்டு பணம் உங்களுடைய கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்படும். இதுகுறித்து IDFC வங்கி வெளியிட்டிருக்கும் விளம்பரம் இதோ…

இதன் பயன்கள் என்னென்ன?

எளிமையான மற்றும் விரைவான பணப்பரிவர்த்தனை என்பதுதான் முதல் சிறப்பு. மேலும் உங்களுடைய பயோமெட்ரிக் தகவலின் அடிப்படையில் நடைபெறுவதால் பாதுகாப்பானதும் கூட. வணிகர்களும் பி.ஒ.எஸ் மெஷின் வைத்திருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் மொபைல் மற்றும் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இதில் இல்லை. எங்கே சென்றாலும் உங்களுடைய கைரேகையைக் கொண்டு மட்டுமே பணம் செலுத்திவிட்டு வரலாம். கையில் மொபைல் இருக்க வேண்டும், இன்டர்நெட் வேண்டும் என்ற அவசியம் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு இல்லை. இதுமட்டுமின்றி கார்டு நிறுவனங்கள் மற்றும் பி.ஓ.எஸ் மெஷின்களுக்கான சேவைக் கட்டணமும் இதில் கிடையாது. பி.ஓ.எஸ் மெஷின்களை விடவும் மொபைல்போன்கள் நடைமுறையில் எளிதானவை.

குழப்பங்களும், சிக்கல்களும்:

வணிகர்களுக்காக பிரதமர் பீம் ஆதார் ஆப்பை அறிமுகம் செய்துவைத்தார் என செய்திகள் வெளிவந்ததுமே பலரும் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று பீம் ஆதார் பே ஆப் என்றுதான் தேடினர். ஆனால் ஏற்கெனவே இருந்த பீம் ஆப்பைத் தவிர வேறு எதுவும் புதிதாக அறிமுகம் செய்யப்படவில்லை. பீம் ஆப்பில் ஏற்கெனவே இருந்த நடைமுறைகள் இருக்கிறதே தவிர, புதிதாக ஆதார் பே வசதிக்காக எந்த ஆப்ஷனும் இல்லை. இதுவே பலரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதேபோல பாரத ஸ்டேட் வங்கியின் ஆப் தவிர வேறு எந்த வங்கியின் ஆதார் பே App-ம் ப்ளே ஸ்டோரில் இல்லை. IDFC வங்கியின் ஆதார் பே ஆப் இருக்கிறது. ஆனால் இதனை ப்ளே ஸ்டோர் சென்று டவுன்லோட் செய்ய முடிவதில்லை. அந்த வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பித்துத்தான் பெற வேண்டும். எனவே இந்த App-ஐ எப்படிப் பெறுவது என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதுபோன்ற குழப்பங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தால்தான் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் மக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *