shadow

பட்டுக் கூந்தலுக்கு

கூந்தல் அழகாக இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? அடர்த்தியான, நெடிய கூந்தல் பெண்களின் தோற்றத்துக்குப் பேரழகூட்டி, பார்ப்பவரை வசீகரிக்கும். மாறிவரும் உணவுப் பழக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடு, வெப்பம், மாசு, தூசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றால், கூந்தல் பொலிவிழந்து, உடைந்து, முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை இன்றைய ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் சகஜமாகிவிட்டது. இவை தவிர, பரம்பரை வழுக்கை உள்ளவர்கள், நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோரையும் முடி உதிர்தல் தாக்குகிறது. இதைப் போக்க, கடைகளில் விற்கப்படும் பலவித ஷாம்பூகள், கண்டிஷனர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தி பணம், ஆரோக்கியம் இரண்டையும் பறிகொடுத்தவர்கள்தான் அதிகம்.

முடியை வலுவாக்க, பொடுகு நீங்கப் பயன்படுத்த வேண்டிய எண்ணெய், ஹேர்பேக், ஹேர் மாஸ்க், மூலிகை மருந்துகள், கூந்தல் பராமரிப்புக் குறிப்புகள் பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் பத்மபிரியா. முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சாப்பிட வேண்டிய உணவு முறைகளையும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் முடியைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும் அளிக்கிறார் சரும நோய் நிபுணர் சந்தன்.

முடி உதிர்தல்

எலும்பின் உபபொருள்தான் நகம் மற்றும் முடி. இறந்த செல்களால் இவை உருவாகின்றன. நம் உடலில் நாள்தோறும் செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் தோன்றுகின்றன. அதுபோலவே, நாள்தோறும் முடிகள் உதிர்ந்து, புதிய முடிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பிட்ட அளவுக்கு முடி உதிர்வு இருந்தால் பிரச்னை இல்லை. அது இயல்பான விஷயம்தான். ஆனால், அளவுக்கு அதிகமாக உதிர்வதையே நாம் ‘முடி உதிர்தல் பிரச்னை’ என்கிறோம்.

அதீத முடி உதிர்தல் ஏன்?

செல்கள், திசுக்கள், பிளாஸ்மா, ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை, எலும்பு ஆகியவற்றால் ஆனது நமது உடல். இவற்றில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் விளைவாக, முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி உதிர்வுக்கு முக்கியக் காரணங்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ரத்தச்சோகை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், ரத்தச்சோகை ஏற்படும். புரதச்சத்து இன்மை, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுஉப்புகளில் குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும்.

பெஸ்ட் ஷாம்பூ எது?

இன்று கடைகளில் ஹெர்பல் ஷாம்பூகள் பெருகத் தொடங்கிவிட்டன. அவற்றை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் எனப் பலர் குழம்புகின்றனர். எந்த பிராண்ட் பயன்படுத்தினாலும் அதிக நறுமணம் கொண்டவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் நறுமணத்துக்காக பல செயற்கை ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் கூந்தல் வலுவிழந்து, உதிரும்.

சிகைக்காய், பூந்திக்கொட்டை, வெந்தயம் மூன்றையும் சமஅளவு கலந்து, அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்துவந்தால், பட்டுப்போன்ற கூந்தல் கிடைக்கும். இது இயற்கையான ஷாம்பூ. இதனால், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.

Leave a Reply