shadow

பட்டச் சான்றிதழ் தொலைந்தால் இனி எஃப்.ஐ.ஆர். தேவையில்லை: சென்னைப் பல்கலை.

பட்டச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், இரண்டாம்படி சான்றிதழை (டூப்ளிக்கேட் சர்ட்டிபிகேட்) பெற காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யத் தேவையில்லை என்ற புதிய நடைமுறையை சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டுவர உள்ளது. அதேசமயம், இந்த இரண்டாம் படி சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணத்தை ரூ. 1000 கூடுதலாக உயர்த்தவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, பட்டச் சான்றிதழைத் தொலைத்துவிட்ட மாணவர்கள் இரண்டாம் படி பட்டச் சான்றிதழைப் பெற முதலில், போலீஸில் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். பின்னர், காவல்துறையிடமிருந்து தொலைந்துபோன சான்றிதழை கண்டுபிடிக்க இயலவில்லை என சான்று பெற்று பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறை காரணமாக, மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், காவல் துறையிடம் சான்றிதழைப் பெற கையூட்டு கொடுக்க வேண்டி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், இதற்கும் விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், மாணவர்கள் இரண்டாம் படி சான்றிதழைப் பெற இனி போலீஸாரிடமிருந்து சான்றிதழ் பெறத் தேவையில்லை என்ற வகையில், புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கட்டணம் பன்மடங்கு உயர்வு: அதேசமயம், இந்த இரண்டாம்படி சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுவரை, படிப்பை முடித்து 5 ஆண்டுகள் வரை ஆனவர்கள், இரண்டாம் படி சான்றிதழைப் பெற ரூ. 2000 கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 3000 என்ற அளவிலும், 11 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 4000, 16 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 5000 , 21 முதல் 25 ஆண்டுகள் முன் படிப்பை முடித்தவர்கள் ரூ. 7,500 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், தற்போது ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ள புதிய நடைமுறையின்படி 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்பை முடித்தவர்கள் ரூ. 3000 கட்டணம் செலுத்த வேண்டும். அதுபோல, 6 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 4000, 11 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 5000, 16 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 8000 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரம், 21 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்களுக்கான கட்டணம் ரூ. 30,000 என அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இடம்பெயர்தல் சான்றிதழ் இனி தேவையில்லை
தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர், முதுநிலை பட்டப்படிப்பை தமிழகத்திலுள்ள வேறு பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதற்கு, இடமாறுதல் சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக மாணவர்களும், வெளி மாநில மாணவர்களும் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே, வேறு பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்பில் சேர்க்கை பெற முடியும்.

இந்த நடைமுறையில் இருந்து தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க, சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழகத்திலுள்ள வேறு பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்துக்கோ மாற்றம் பெறும் மாணவர்கள் இடமாறுதல் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறினர்.

Leave a Reply