shadow

படுவீழ்ச்சியில் பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு ரூ. 4 லட்சம் கோடி இழப்பு

இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தையின் நிலை கடந்த சில நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையில் நிப்டி சுமார் 307 புள்ளிகள் சரிந்து 10,200 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 1,029 புள்ளிகள் சரிந்து 33,732 புள்ளிகளாக இருந்தது.

இன்றைய இழப்புக்கு முக்கிய காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை சரிவு என்று கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்றும் சரிவைக் கண்டது. இந்திய ரூபாய் மதிப்பு இன்று 74.45 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி என்று இன்று உலகமே சரிவை சந்தித்துள்ளது.

நேற்றைய பங்குச் சந்தையில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை விற்று வெளியேறினர். இந்த வகையில் இந்தாண்டு மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து 10 பில்லியன் அளவிற்கு தங்களது பங்குகளை விற்று வெளியேறினர். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்து திரும்பி வராத வகையில் ஏற்பட்ட இழப்பு ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றத்துக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது

Leave a Reply