நீர் கசிகிறதா உங்கள் வீட்டில்?

ஒரு வருடத்துக்கு முன்புதானே வீட்டைக் கட்டி முடித்துக் கிரகப் பிரவேசம் செய்தோம். அதற்குள் இப்படியா?’ என்று வருத்தப்பட்டார் நண்பர். என்ன ஆச்சு என்றபோது வீட்டின் மேற்பகுதியைச் சுட்டிக் காட்டினார். ஆங்காங்கே ஈரம் பரவத் தொடங்கியிருந்தது.

இது எதனால் என்று மண்டையை உடைத்துக்கொண்டார். கட்டிடத்தில் நீர்க் கசிவு என்று சொல்லும்போது அது பெரும்பாலும் மேல் தளத்துக் கசிவாகவோ, கழிப்பறைகளில் ஏற்படும் கசிவாகவோ இருக்க வாய்ப்பு மிக அதிகம்.

இது போன்ற நீர்க் கசிவுகளைத் தொடர அனுமதித்தால் சுவரின் வண்ணம் பாழ்படும். மின் கசிவு ஏற்படலாம். எனவே, தோற்றம் என்கிற கோணத்தில் மட்டுமல்லாமல் பாதுகாப்பு என்ற கோணத்திலும் நீர்க் கசிவுகளைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.

இதை உணர்ந்த நண்பர் கசிவை நீக்க ப்ளம்பரை அழைத்தார். நீர் கசிவதற்கான காரணத்தைத் தொலைபேசியிலேயே கேட்டார். “பார்க்காமல் சொல்ல முடியாது சார்” என்றார் ப்ளம்பர். “அது நியாயம்தான். இருந்தாலும் என்ன காரணமாக இருக்கலாம்னு தோராயமாகச் சொல்லுங்களேன்” என்று நண்பர் விடாமல் கேட்க, ஒரு பட்டியலையே விடையாகத் தந்தார் ப்ளம்பர்.

தண்ணீர்க் குழாய்களில் கசிவு ஏற்பட்டிருக்கலாம், குளியல் அறையில் நீர்க் கசிவு உண்டாகி இருக்கலாம் அல்லது தரைத் தளத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம். வெளிச் சுவர் பிளாஸ்டர் செய்யப்படாமல் இருக்கலாம் அல்லது அண்டை வீட்டினரின் சுவருக்கும், உங்கள் சுவருக்குமிடையே சிறு இடைவெளி இருக்கலாம்.

பராமரிப்பு சரியில்லை என்றாலும் நீர்க் கசிவுகள் ஏற்படும். குழாய்களில் தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. குழாய் என்பதோடு வால்வுகள், வாஷர்கள் போன்ற பல இணைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. நாளாக இவற்றில் தேய்மானம் உண்டாகலாம். அவற்றை நீக்கி மாற்றுப் பாகங்கள் பொருத்தவில்லை என்றால் நீர்க் கசிவு உண்டாக வாய்ப்பு உண்டு.

நீர் செல்லும் பாதையில் உள்ள இணைப்புகள் நீர்க் கசிவுக்கு அடித்தளமிடுகின்றன. இந்த இணைப்புகளில் தரம் வாய்ந்த சிமெண்டைப் பூச வேண்டும். சில வீடுகளில் பல குடும்பங்களுக்குமாகச் சேர்த்து பொதுவான கழிப்பறைகள் இருக்கும். அவற்றில் சோப் தாள், ஷாம்பு தாள் போன்றவற்றை போடுவதால் நீர் அடைத்துக் கொண்டுவிடும். இதனால் குழாய்களுக்குள் அடைபட்ட நீரால் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு.

நீரைத் திறந்துவிடும் வால்வு சரியாக இயங்கவில்லை என்றாலும் நீர் வெளியேறலாம். ஆனால் வீடு கட்டும்போதே சில முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தால் நீர்க் கசிவுகளைப் பெரும்பாலும் தவிர்த்திருக்க முடியும் என்றார் அவர்.

தரைத் தளத்தைக் கொத்திய பிறகு ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வாரம் பொறுத்திருக்க வேண்டும். இதை ஆற்றுப்படுத்துதல் (curing) என்பார்கள். இதற்குப் போதிய அவகாசம் கொடுக்கவில்லை என்றால் சிமெண்டில் வெடிப்புகள் ஏற்பட்டு நீர்க் கசிவு உண்டாகலாம். நீர் கசியவில்லை என்பது உறுதியான பிறகுதான் தண்ணீர் போக்குவரத்துக்கான குழாய்களைப் பொருத்த வேண்டும்.

இவற்றைப் பொருத்திய உடனேயே பூசி மெழுகிவிடக் கூடாது. அழுத்தமானியைப் பயன்படுத்த வேண்டும். உரிய வெப்ப நிலையில் கசிவு சோதனையைச் செய்ய வேண்டும்.

இருவழி நீர்த் தொடர்புகளை அதில் கொடுத்து அந்த அழுத்தத்தை இது தாங்குகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பொருளாக அது இருக்க வேண்டும். பிறகுதான் சிமெண்டைப் பூச வேண்டும்.

கசிவு என்பது குழாயில் ஏற்படுகிறதா அல்லது தரையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் மூலமாக ஏற்படுகிறதா என்பதைக் கணிக்க வேண்டும். அனுபவமுள்ள கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டிடப் பொறியாளர்கள் நீர்க் கசிவைத் தடுக்கும் வகையில் பல விதங்களில் செயல்பட முடியும். தரைத் தளம் என்பது சமமாக இருக்க வேண்டும். கொஞ்சம் மேல் கீழாக இருந்தாலும் ஆங்காங்கே நீர் தேங்கும். அது கீழ் பகுதிக்குக் கசியும்.

ஆக, கட்டுமானத்தின்போது தகுந்த முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் உரிய பராமரிப்பின் மூலமும்தான் நீர்க் கசிவு பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *