shadow

நிலக் கடன் கிடைக்குமா?

நிலம் வாங்கி நாமே வீடுகட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. வீடுகட்ட வங்கிகள் கடனளிக்கும்போது, நிலம் வாங்க மட்டும் கடன் கொடுக்காதா என்ன? இதற்கான விடை அவ்வளவு தெளிவானதல்ல.

வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக் கடனுக்கும் நிலக் கடனுக்கும் வேறுபாடு உண்டு.

இப்போது நிலம் வாங்கிப் போடுவது, ஐந்து, ஆறு வருடங்களுக்குப் பிறகு சேமிப்பு உயரும்போது வீடுகட்டிக் கொள்வது என்று நீங்கள் திட்டமிட்டால் நிலத்துக்கான கடனை அளிப்பதில் வங்கிகள் ஈடுபாடு காட்டுவதில்லை.

வீட்டின் மதிப்பில் 80 சதவிதம் வரைகூட வீட்டுக்கடன் அளிக்கப்படலாம். ஆனால், நிலக் கடனைப் பொறுத்தவரை அதிகபட்சம் (நிலத்தின் மதிப்பில்) 60 சதவிகிதம்தான் கடனாக வழங்கப்படுகிறது. (விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் நில மதிப்பில் 60 சதவிகிதம்).

ஏற்கெனவே கட்டப்பட்ட அல்லது கட்டிடமாக எழும்பிக்கொண்டிருக்கிற வீடுகளுக்கு வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் வெகு சீக்கிரமே அங்கு வீடு எழுப்பப்பட வேண்டும்.

வீட்டுக் கடனுக்கும் நிலக் கடனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளைப் பார்ப்போம்.

வீட்டுக் கடன் என்பது எந்தப் பகுதியில் எழுப்பப்படும் வீட்டுக்கும் அளிக்கப்படும். ஆனால், நிலக் கடனை அளிக்க வேண்டுமென்றால் உங்கள் நிலம் குடியிருப்புப் பகுதியில் இருந்தாக வேண்டும். அதாவது மாநகராட்சி அல்லது முனிசிபல் எல்லைக்குள் இருந்தாக வேண்டும். இதன்படி பார்த்தால் கிராமத்தின் ஒரு மூலையில் உள்ள நிலத்தை வாங்க நிலக்கடன் அளிக்கப்படுவதில்லை. விவசாய நிலத்தை நீங்கள் வாங்குவதற்கும் நிலக்கடன் கிடையாது. ஆனால், இவற்றைக் கைக்காசு போட்டு வாங்கிவிட்டு பிறகு அங்கு வீடுகட்டும்போது உங்களுக்கு வீட்டுக்கடன் அளிக்க வாய்ப்பு உண்டு.

வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடன் கணக்கில் நீங்கள் செலுத்தும் வட்டி, மாதத் தவணைக்கு வரிச்சலுகை உண்டு. ஆனால், நிலக் கடனுக்கு இதுபோன்ற எந்தச் சலுகையும் கிடையாது.

நிலக் கடனை ஆறேழு வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அதிகபட்சம் 15 வருடங்கள். ஆனால், வீட்டுக் கடன் என்றால் உங்களுடைய வயது, வருமானத்தைக் கணக்கிட்டு 30 வருடங்களில்கூட நீங்கள் தவணைகளைச் செலுத்தலாம்.

நிலக் கடனாக மிக அதிகத் தொகையை வழங்க மாட்டார்கள். அதிக பட்சம் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படலாம். ஆனால், வீட்டுக் கடனுக்கு அப்படி உச்சத் தொகை எதுவும் நடைமுறையில் இல்லை.

பல வங்கிகள், நிலக்கடனை வழங்க, நிபந்தனைகளை விதிக்கின்றன. நிலக் கடனைப் பெற்ற சில வருடங்களுக்குள் (பெரும்பாலும் இரண்டு வருடங்கள்) அங்கு வீடு கட்டத் தொடங்க வேண்டும் என்ற நிபந்தனை முக்கியமானது.

நிலக் கடனில் நிலத்தை வாங்கிவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் வீடு கட்டாமலே இருந்தால் வட்டி விதிகம் அதிகரிக்கப்படும் அல்லது முழுக் கடன் தொகையையுமே திருப்பிக் கொடுக்கச் சொல்வார்கள்.

இதற்கு ஒரு பின்னணி உண்டு. வீடு கட்டிக் கொள்வதைத் தவிர வேறு காரணத்துக்காக நிலம் வாங்குவதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை. பங்குகள் (Shareகள்) போல நிலங்களை ஆங்காங்கே வாங்கிப் போட்டு அவற்றின் மதிப்பு உயர்ந்ததும் விற்றுவிடும் போக்கை அரசோ வங்கிகளோ ஆதரிப்பதில்லை.

 

Leave a Reply