நாளை ஆடி வெள்ளி! விரதம் இருக்கும் முறை

ஆடி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு, திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பின்னர் லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சணையுடன் வைத்து கொடுத்து, அன்னதானம் செய்தால் வெகு சிறப்பான பலனைப் பெறலாம். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு, தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது.

அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும்.

ஒன்பது வகையான மலர்களால், ஒன்பது சக்திகளையும், ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே ‘நவசக்தி பூஜை’ எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும். ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *