shadow

நான் தயாரிப்பாளர் இல்லை, எப்போதுமே வேலைக்காரன் தான்: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான ‘கனா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது:

நண்பர்களுக்குச் செய்யும் உதவி இது என எல்லாரும் சொன்னார்கள். உதவி இல்லை, இது கடமை. நான் அவர்களுடன் பொறியியல் கல்லூரியில் நண்பனாக இருக்கும்போது, ‘வா தண்ணியடிக்கப் போகலாம்… வா தம்மடிக்கப் போகலாம்…’ என்று கூட்டிக்கொண்டு போகாமல், என்னை நல்லவனாக நடத்தியவர்களுக்கு நான் திருப்பிச் செய்ய வேண்டிய கடமை.

தயாரிப்பாளர் என்பது பேனர், போஸ்டரில் போட வேண்டிய கிரெடிட் மட்டும்தான். ஆனால், நான் எப்போதுமே ‘வேலைக்காரன்’ தான். அப்படியே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.

அருண்ராஜா காமராஜ் எழுதிய அல்லது பாடிய பாடல் ஹிட்டாகும்போது, போன் பண்ணி வாழ்த்துவதைத் தாண்டி, ‘நீ இதிலேயே திருப்தி அடைந்து விடாதே. இயக்குநர் ஆவதற்காகத்தான் இங்கு வந்தாய். எனவே, இயக்குநர் ஆகும் வழியைப் பார்’ என்று திட்டிக்கொண்டே இருப்பேன்.

அவனை எதாவது பண்ண வைக்க வேண்டும் என்று தோன்றியது. ‘கிரிக்கெட்டை வைத்து ஒரு கதை பண்ணு’ என்று நான் தான் அவனிடம் சொன்னேன். நான் சொன்னது, ஊர்ல விளையாடுவோமே… அந்த கிரிக்கெட். ஆனால், ‘இண்டர்நேஷனல் கிரிக்கெட்டை வைத்துப் பண்ணலாம். அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை வைத்துப் பண்ணலாம்’ என்றான்.

‘ஒரு விவசாயி மகள் கிரிக்கெட் விளையாடுகிறாள்’ என்று அருண் ஒன்லைன் சொன்னபோது, பயங்கர எதிர்பார்ப்பாக இருந்தது. ஒன்லைனைத் திரைக்கதையாக மாற்று என்று அவனிடம் சொன்னபோதே, இந்தக் கதையை நான் தான் தயாரிப்பேன் என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால், அதை அவனிடம் சொல்லவில்லை.

ஏனென்றால், தேடல் அவனுக்குள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். முழுக் கதையைக் கேட்டபோது ‘ஜிவ்’வென்று இருந்தது. அதன்பிறகு தான் இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஐடியாவை அருணிடம் சொன்னேன்

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்

Leave a Reply