தொழில்நுட்பம் புதுசு: ஸ்நாப்ஷாட் கிளாஸ்

கேமரா இணைக்கப்பட்ட சன் கிளாஸை ஸ்நாப்ஷாட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 10 விநாடி வீடியோக்களை எடுத்து ஸ்நாப்ஷாட் கணக்கு மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம். கூகுள் கிளாஸைவிட குறைவான தொழில்நுட்பத்தில் இயங்கும்.

மிகப்பெரிய விமானம்

உலகின் மிகப் பெரிய விமானத்தை உருவாக்கியுள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஆலன். இந்த விமானத்தில் 5 லட்சம் பவுண்ட் (226 டன் ) எடை வரை எடுத்து செல்லலாம். ராக்கெட் போல உள்ள இந்த விமானத்தில் இருந்து செயற்கைக்கோளையும் அனுப்பலாம். 50 அடி உயரமும், 385 அடி நீளம் கொண்ட இந்த விமானம் 6 இன்ஜின்களுடன் இயங்குகிறது. இரண்டு விமானங்களை இணைத்தது போல இது உருவாக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் சோதனைக்கு அறிமுகப்படுத்தப்படும்.

லண்டன் கூகுள்

கூகுள் நிறுவனம் லண்டனில் புதிய தலைமையகத்தைக் கட்ட உள்ளது. இதற்கான வடிவமைப்பை உலகப் புகழ்பெற்ற தாமஸ் ஹெல்தர்விக் மற்றும் பிஜார்கி இன்கெல்ஸ் இரண்டு நிறுவனங்களும் கொடுத்துள்ளன. 2018-ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்குகின்றன. 11 அடுக்குகளைக் கொண்ட இந்த கட்டிடம், 10 லட்சம் சதுர அடியில், லண்டனில் உள்ள கிங்ஸ்கிராஸ் ரயில்வே நிலையம் அருகில் அமைய உள்ளது. கட்டிடத்துக்கு உள்ளே ஊழியர்களுக்கான அனைத்து வசதிகளுடன், நீச்சல் குளம், கால்பந்து, கூடைப்பந்து அரங்குகளும் இருக்கும்.

பறக்கும் டாக்சி

பறக்கும் டாக்சி சேவையை 2020ம் ஆண்டுக்குள் துபாய் மற்றும் டல்லாஸில் உபெர் தொடங்க உள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த பறக்கும் டாக்சியை பல விமான நிறுவனங்களும் உபெருக்காக தயாரிக்க உள்ளன.

உயிர் ரோபோ

தட்டானின் மூளையைக் கட்டுப்படுத்தும் சென்சார்களை அமெரிக்காவில் வடிவமைத்துள்ளனர். இறக்கைகளில் உள்ள சோலார் பேனல்கள் மூலம் மின்சக்தியை இது எடுத்துக் கொள்ளும். டிராகன்ஃப்ளை (DragonflEye) என்று பெயரிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *