தொப்பை ஒரு தேசிய பிரச்னை!

இன்றைய தேதியில் உடல்பருமனும் தொப்பையும்தான் நமது தேசியப் பிரச்னை. தோற்றத்தை மட்டும் அல்ல; மொத்த உடல் நலத்தையுமே பாதிக்கும் தொப்பையைக் குறைத்து ஃபிட்டாவது எப்படி?

தொப்பை என்றால் என்ன?

பொதுவாக, நம் உடலில் டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides), தோல்புறக் கொழுப்பு (Subcutaneous fat), உட்புறக் கொழுப்பு (Visceral fat) என மூன்று வகையான கொழுப்புகள் உள்ளன. இதில் டிரைகிளிசரைட்ஸ் ரத்தத்தில் கலந்து இருக்கும். தோல்புறக் கொழுப்பு தோலின் அடியில் உள்ள கொழுப்புப் படலம். உட்புறக் கொழுப்பு என்பவை குடலின் வெளிப்புறம் ஒட்டிக்கொண்டிருப்பவை. இந்தக் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் அதிகமாக இருப்பதைத்தான் தொப்பை என்கிறோம்.

தொப்பையால் என்ன பிரச்னை?

உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய்கள், பக்கவாதம், புற்றுநோய்கள் உட்படப் பல பிரச்னைகளுக்கும் தொப்பை நுழைவாயிலாய் மாறிவிடுகிறது.

தொப்பை ஏன் உண்டாகிறது?

* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கார்போனேட்டட் பானங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்.

* நார்ச்சத்து குறைந்த உணவுகளைச் சாப்பிடுதல்.

* உடற்பயிற்சி, உடல் உழைப்பு இன்மை.

* மனஅழுத்தம், சோகம், கோபம் காரணமாக அதிகமாகச் சாப்பிடுதல்.

* மதுப்பழக்கம்.

* தூக்கமின்மை.

* பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் மாற்றம்.

தொப்பை குறித்த தவறான நம்பிக்கைகள்

நம்பிக்கை: அதிகமாக உண்டால் தொப்பை வரும்; தொப்பை குறையவும் குறையாது.

உண்மை நிலை: இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். சிலர் அதிகமாக உண்டாலும் குண்டாக மாட்டார்கள். காரணம், அவருடைய ஜீன் மற்றும் உடல்வாகாய் இருக்கக்கூடும். சிலர், குறைவாகச் சாப்பிட்டாலும் தொப்பையுடன் இருப்பார்கள். பரம்பரையாகக் குண்டாக இருப்பவர்கள், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தொப்பையைக் குறைக்க வாய்ப்புகள் உள்ளன.

நம்பிக்கை: தொப்பை இருந்தால் இதயநோய்கள் வரும். உயிரிழப்புகூட நேரலாம்.

உண்மை நிலை: அதிகக் கொழுப்பு எப்போதும் ஆபத்துதான். தொப்பை இருந்தால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியாது. மேலும், கொழுப்புப் பலதரப்பட்ட நோய்களை உண்டாக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கலாம்.

நம்பிக்கை: உடற்பயிற்சியால் தொப்பை குறையும்.

உண்மை நிலை: உண்மைதான். ஆனால், வெகுதூரம் நடந்த பின்பு, எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பது, உடற்பயிற்சிகளைத் தவறாகச் செய்வது, ஸ்போர்ட்ஸ் டிரிங்க்கைப் பயிற்சியின் இடையே குடிப்பது போன்றவற்றால் கொழுப்புக் குறைவது தடுக்கப்படுகிறது. இதனால், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது கடினமாகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *