தூக்கமின்மை, மேகநோய், தீக்காயம்… மருந்தாகும் மருதாணி!

வீட்டு விஷேசங்களில் மருதாணிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. விஷேசங்கள் என்ற உடனேயே கூட்டமாக மருதாணி வைத்துக்கொள்ளும் பெண்கள் கூட்டம்தான் நம் மனக்கண்ணில் வந்துபோகும். அழகியல் சார்ந்த பொருளாகக் கருதப்படும் இது, அழகுப்பொருள் மட்டும் அல்ல ஆரோக்கியத்துக்கு உதவும் ஒன்றும்கூட.

மருதாணியில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன் அளித்த தகவல்களில் தொகுப்பு இது…

மகத்துவம் நிறைந்த மருதாணிக்கு `மறுதோன்றி’, `ஐவணம்’, `அழவணம்’ என்று வேறு பெயர்களும் உள்ளன. இது அனைத்து வகையான நிலங்களிலும் வளரும் தன்மைகொண்டது. இதன் விதை, இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்தும் மருத்துவத் தன்மைகொண்டவை. இது செடி அல்லது சிறு மர வகையைச் சார்ந்தது. இது நான்கு முதல் ஆறு மீட்டர் உயரம் வரை வளரும் தன்மைகொண்டது. இதன் இலைகள் இரண்டு முதல் நான்கு செ.மீ வரை வளரக்கூடியவை. நான்கு இதழ்களைக்கொண்ட இதன் பூக்கள் பல நிறங்களில் இருக்கும். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் இது அதிகமாகப் பூக்கும். பச்சை நிறத்தில் சிறியதாக இதன் காய்கள் இருக்கும். காய்கள் வறண்ட பின்னர், அவற்றை விதைகளாகப் பயன்படுத்தலாம். மருதாணி, துவர்ப்புச் சுவை உடையது.

மரம்

மருதாணியின் மருத்துவ குணங்கள்:

மருதாணியின் விதைகள் பீட்டா ஐயோனன் (Beta Ionone) என்ற வேதிப்பொருளைக்கொண்டது. இது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

உடலுக்குக் குளிர்ச்சி

இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய தாவரம். மருதாணி இலையை சட்னியைப்போல நன்றாக, விழுந்தாக அரைத்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் பாதத்தில் தடவிக்கொள்ளலாம். அதேபோல் கை, கால் விரல்களில் வைத்துக்கொண்டாலும், இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.சிலருக்கு குளிர்ச்சி தாங்காது அவர்கள் மட்டும் பாதாம் பிசினுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

முடி வளர்ச்சி

அரைத்த மருதாணி இலைகளைத் தினமும் தலையில் தடவி வர, பொடுகுகள் குறைந்து தலைமுடி பளபளப்படையும். மேலும் முடி நல்ல கருமையாகவும் மென்மையாகவும் காட்சிதரும். இளநரை போன்ற நரை சம்மந்தமான பிரச்னைகளுக்கும் இது நல்ல தீர்வைக் கொடுக்கும்.

முடி வளர்தல்

தூக்கமின்மைக்கு மருந்து

மருதாணிப் பூக்களை ஒரு துணியில் சுற்றி, தூங்கும்போது தலைமாட்டில் வைத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம்வரும்.

மேகநோய்க்கு மருந்து

மேகநோய்க்கு ஆகச்சிறந்த மருந்தாக இது இருக்கிறது. இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, அதைப் பாலுடன் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்திவந்தால் மேகநோயால் உண்டாகும் புண்கள் குணமாகும்.

தூக்கமின்மை

தீக்காயங்களுக்கு மருந்து

இதன் இலைகள் குளிர்ச்சித் தன்மைகொண்டவை. இதனால் தீக்காயங்களால் உண்டாகும் எரிச்சலுக்கு இது சிறந்த மருந்தாகும். எரிச்சலைக் குறைத்து, புண்கள் ஆறவும் இது துணைபுரியும்.

கல்லீரலைக் காக்கும்

கல்லீரல் பிரச்னையால் உண்டான நோய்களை இது குணப்படுத்தும். குறிப்பாக, மஞ்சள்காமாலைக்கு இது மருந்தாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும் மருதாணியால் உண்டாகும் நன்மைகள்:

இதன் இலையை அரைத்து தினமும் வாய்க்கொப்பளிக்க, ஆறாத அம்மைப் புண்கள், எரிச்சல் தரும் வாய்ப்புண்கள், தொண்டை கரகரப்பு ஆகியவை குணமாகும்.

அரைத்த இலைகளை குளிக்கும்போது சோப்புடன் தேய்த்து குளித்துவர, கருந்தேமல், படை போன்றவை சரியாகும்.

மருதாணி இலையை அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அதிகமான ரத்தப்போக்கு நிற்கும். வெள்ளைப்படுதலைச் சரிசெய்யும்.

இதன் இலைச்சாறு வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்ற வயிற்றுக் கோளறுகளைக் கட்டுக்குள் கொண்டுவரும்.

நகச்சுத்தி, கால் ஆணி போன்றவற்றுக்கு இது மிகச்சிறந்த நிவாரணி.

உடல் சூட்டால் உண்டாகும் கண்ணெரிச்சலைத் தீர்க்கும்.

மருதாணி கஷாயத்தை சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் சரியாகும்

இயற்கை தந்த அற்புதக் கொடை இந்த மருதாணி. அதனால் இயற்கையாக வளரும் மருதாணி இலைகளைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அழகுக்காக என்றாலும்கூட ரசயானப்பூச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். மருதாணி அழகோடு, ஆரோக்கியத்தைத் தரும் அற்புத மூலிகை! இதைச் சரியாகப் பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களிலிருந்து விடுபடுவோம்! உடல்நலத்தைச் சிறப்பாகப் பேணுவோம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *