shadow

துவைத்த துணிகளை வீட்டிற்குள் காயவைப்பது நல்லதா?

வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதால் அப்படி என்ன நடந்துவிடும் என்று கேட்பவர்களுக்கு அதிர்ச்சியான பல தகவல்களை தருகிறது, சமீபத்திய ஆய்வு.

இடவசதியின்மை, மழை, குளிர் என பல காரணங்களால் வீட்டுக்குள்ளேயே துணிகளை உலர்த்தும் பழக்கமுள்ளவரா நீங்கள்? வீட்டாரின் ஆரோக்கியக்கேடுகளுக்கு அதுவும் ஓர் ஆரம்பமாகி விடுகிறது. வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதால் அப்படி என்ன நடந்துவிடும் என்று கேட்பவர்களுக்கு அதிர்ச்சியான பல தகவல்களை தருகிறது, சமீபத்திய ஆய்வு.

இந்த பூமியில் நம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் எக்கச்சக்கம். பாக்டீரியா, பூஞ்சை என்று நாம் பெயரிட்டு அழைக்கும் இவற்றுக்கு மிகவும் பிடித்தமானது ஈரப்பதம். இவை வாழ்வதற்கும், பெருக்கமடைவதற்கும் உகந்தது ஈரப்பதம் மிக்க இடங்கள் தான். இவை மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைத்து பலவீனமாக்கிவிடும் அளவுக்கு மிகவும் ஆபத்தானவை.

இதுகுறித்து என்.எஸ்.டபிள்யூ. பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நலத்துறையைச் சார்ந்த பேராசிரியர்களான நிக் ஆஸ்போன், கிறிஸ்டைன் கெவி நடத்திய ஆய்வு முடிவுகள் பின்வரும் உண்மையை விளக்கியுள்ளன. பொதுவாக ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் இந்த நுண்ணுயிர்கள், காற்றோட்டம் குறைவாக இருக்கும் நம் வீடுகளுக்குள் காயவைக்கப்படும் துணிகளில் வந்து ஒட்டிக்கொள்ளும் இயல்புடையவை.

பின்னர் பாதி உலர்ந்தும், உலராமலும் இருக்கும் துணிகளில் ஒருவித வாடையை உண்டு பண்ணும். அந்த ஆடையை ஒருவர் அணியும் போது அவரது மூச்சுக்குழல் வழியாகப் நுழைந்து நுரையீரல் சார்ந்த நோய்களை, குறிப்பாக ஆஸ்துமா போன்ற நோய்களை உருவாக்குகின்றன. இந்த நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராட ஒருவருக்கு நோய் எதிர்ப்புத் திறன் என்பது அவசியம்.

ஆனால், ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்புத் திறன் ஏற்கெனவே குறைவு என்னும் பட்சத்தில் இந்த நுண்ணுயிர்கள் நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி, ஆரோக்கியத்தைப் பாதிக்கும். வீட்டில் நாம் துணியை உலர்த்தும்போது, இந்த நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்ற சூழ்நிலைகளை விட 30 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம்.

பெட்டி போன்ற சிறிய வீட்டில் எங்கு தான் துணியை உலர்த்துவது என்று கேட்கலாம். முடிந்தவரை துணிகளை நீர் வடியும் வரை வெயில் இருக்குமிடத்தில் உலர்த்துங்கள். வேறு வழியில்லை என்றால், ஓரளவு காற்றோட்டம் நிறைந்த அறையில் (அது படுக்கை அறையாக இல்லாமல் இருப்பது நலம்) துணியை உலர்த்தி எடுங்கள்.

Leave a Reply