திருவொற்றியூர் கிளை நூலகத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு: அமைச்சர் செங்கோடையன்

திருவொற்றியூரில் உள்ள கிளை பொது நூலகத்தின் முப்பெரும் விழாவில், இந்திய சைகை மொழி அகராதியை காது கேளாத மாணவிக்கு வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

திருவொற்றியூர் கிளை நூலகத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திருவொற்றியூர் கிளை நூலகத்தில் காது கேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான சிறப்புப் பிரிவு தொடங்குதல், கொடையாளர்களுக்கு பட்டயம் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டை வழங்குதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் என்.துரைராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியது:
இந்நூலகத்தில் புதிய சிறப்புப் பிரிவில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேசுவதை எழுத்தாக மாற்றும் செயலி, வேலைவாய்ப்பு செய்திகளுக்கான செயலி உள்ளிட்டவையும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் கிளை நூலகத்திலும் விரைவில் இப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். நீட் தேர்வு, பல்வேறு அரசுத் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கான பயிற்சியை இங்கு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த ஒரு போட்டித் தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் தமிழக மாணவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையை உறுதி செய்யும் வகையில் பயிற்சி மையங்களை தமிழக அரசு தொடங்கி நடத்தி வருகிறது. மத்திய கல்வி வாரியத்தின் பாடத் திட்டங்களுக்கு இணையாக மாநிலப் பாடத் திட்டமும் இருக்கும் வகையில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத் திட்டத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவடையும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
பொது நூலகத் துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன், வாசகர் வட்ட நிர்வாகிகள் கே. சுப்பிரமணி, எம். மதியழகன், கிளை நூலகர் பானிக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *