திருச்சுனைக்கு வந்தால் திருமணம் கைகூடும்!

7மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள திருச்சுனை கிராமத்தில், சிறிய குன்றின் மீது அழகுற கோயில் கொண்டிருக்கிறார் அகத்தீஸ்வரர்.

கயிலையில் சிவ-பார்வதி திருக் கல்யாணத்தின்போது வடபுலம் தாழ்ந்துவிட, சிவனாரின் ஆணைப்படி உலகைச் சமன்படுத்த தென்னகம் புறப்பட்டார் அகத்தியர். அப்போது அவர், தான் விரும்பியபோது சிவனாரின் திருக்கல்யாண தரிசனம் கிடைக்க வேண்டும் என்று வரம் பெற்றுக்கொண்டார். அப்படி அவர் திருக்கல்யாண தரிசனம் கண்ட தலங்களில் ஒன்றுதான் இவ்வூரும்.

நெடும்பயணமாக தென்னகம் வந்த அகத்தியர், குன்றும் பாறைகளும் நிறைந்த இந்தப் பகுதியை அடைந்தபோது, நீர்ச் சுனை ஒன்று உருவாக்கி, தனது தாகம் தணித்துக்கொண்டாராம். அத்துடன் அவருக்கு சிவனாரின் திருமணக்கோல தரிசனமும் கிடைத்ததாம். அதனால் மனம் குளிர்ந்தவர், சுனையின் அருகிலேயே லிங்கம் அமைத்து வழிபட்டார். அகத்தியர் வழிபட்டதால் இறைவனுக்கு ஸ்ரீஅகத்தீஸ்வரர் என்று திருப்பெயர்; அம்மையின் திருப்பெயர் ஸ்ரீபாடகவள்ளி. அகத்தியர் வேண்டிக்கொண்டபடி, தன்னை வழிபட வரும் பக்தர்களின் மனக்குழப்பங்களை நீக்கி அருள்கிறார் அகத்தீஸ்வரர். அகத்தியர் ஏற்படுத்தியசுனை, இன்றும் நீர் தளும்ப காட்சி தருகிறது. கோயிலில் அகத்திய முனிவருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. மேலும், விநாயகர், காசிவிஸ்வநாதர்- விசாலாட்சி, லிங்கோத்பவர், தேவியருடன் முருகன், துர்கை, பைரவர், சந்திரன், உஷா- பிரத்யுஷா தேவியுடன் சூரியன், நவகிரகங்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

பிற்காலத்தில் சுந்தரபாண்டியனால் ஆலயம் கட்டப்பட்டது. அவனுடைய திருப்பணிக்கு உதவியாக இருந்த பெரிய ஆண்டி, சின்ன ஆண்டி, வெள்ளையம்மாள் ஆகிய மூவரும் தூண் சிற்பங் களாக காட்சித் தருகிறார்கள். இவர்களின் வம்சாவளியினர் இத்தூணை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த தூணுக்கு மட்டும் தனி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருமணக்கோலம் கண்ட தலமாதலால் திருச்சுனை கிராமத்தை சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டி கிராமத்தினரும் இக்கோயிலில் தான் திருமணம் செய்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், அம்மனுக்கு மாங்கல்யமும் பட்டு வஸ்திரமும் வழங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *