shadow

தினம் தினம் விருந்து: புளியோதரைக் குழம்பு

தினமும் ஒரே மாதிரியான சமையல், அலுக்கத்தானே செய்யும்? வாரம் ஒரு நாளாவது மாறுபட்ட ருசியில் சமைத்துச் சாப்பிடலாம் என்று பலருக்கும் தோன்றும். அதுவும் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் காரக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றை எப்போதாவதுதான் செய்வார்கள். அதனால் காரசாரமாகச் சாப்பிட சிலர் ஏங்கிக் கிடப்பார்கள். இன்னும் சிலருக்கோ பாரம்பரிய உணவு சாப்பிட ஆசையாக இருக்கும். இப்படிப் பலரின் ஆவலுக்கும் தீர்வு தருகிறார் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த திலகவதி. புட்டு, கொழுக்கட்டை, புளிக் காய்ச்சல் என்று வகைக்கு ஒன்றாகச் செய்யக் கற்றுத்தருகிறார் இவர்.

புளியோதரைக் குழம்பு

என்னென்ன தேவை?

புளி – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 6

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன்

தனியா – 2 டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை

– தேவைக்கேற்ப

நல்லெண்ணெய் – கால் லிட்டர்

எப்படிச் செய்வது

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, தனியா, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு மிளகாய் வற்றல் போட்டு வறுக்க வேண்டும். அதன்பின்பு புளிக் கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட வேண்டும். நன்கு கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள பொருட்களைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். குழம்பு கெட்டியான பதத்துக்கு வரும்போது வேர்க்கடலை போட்டு இறக்க வேண்டும்.

Leave a Reply