தளம் புதிது: கலைநயம் மிக்க வால்பேப்பர்கள்

டெஸ்க்டாப் திரையை அலங்கரிக்க வால்பேப்பர் அல்லது ஸ்கிரீன்சேவரைப் பயன்படுத்துவது என்பது பழைய உத்திதான் என்றாலும், இன்னமும் பிரபலமாக இருக்கும் உத்தி. பயனாளிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப டெஸ்க்டாப் வால்பேப்பரை அமைத்துக்கொண்டு அதன் மூலம் உற்சாகம் பெறலாம். வால்பேப்பர்களில் எண்ணற்ற ரகங்கள் இருக்கின்றன. இஷ்டம் போல இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

தினமும் அல்லது அடிக்கடி வால்பேப்பர்களை மாற்றும் பழக்கம் கொண்டவர்கள் எனில் அதற்கேற்ற வால்பேப்பர் தளத்தை நாட வேண்டும். ‘ஆர்ட்பிப்’ இணையதளம் இந்த வசதியை வழங்குகிறது. இந்தத் தளம் கலைநயம் மிக்க வால்பேப்பர்களை அளிக்கிறது. சிறந்த ஓவியங்களை வால்பேப்பராக அமைத்துக்கொள்ள வழி செய்கிறது. இப்படி தினம் ஒரு ஓவியத்தைக்கூட வால்பேப்பராக அமைத்துக்கொள்ளலாம்.

இதற்கான வசதியை ஆர்ட்பிப் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தினமும் ஒரு நவீன ஓவியத்தை வால்பேப்பராகத் தேர்வு செய்து தருகிறது. நாள்தோறும் தேவையில்லை எனில், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வால்பேப்பர் மாற வேண்டும் என அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.

இந்தத் தளத்தின் ஆசிரியர் குழு, கவனமாகத் தேர்வு செய்த ஓவியங்களை வால்பேப்பராக அளிக்கிறது. எல்லாமே ஹெச்.டி. தரத்தில் துல்லியமானவை. பணிச்சூழலை ரசனை மிக்கதாக மாற்றிக்கொள்ள இந்த ஓவியங்கள் உதவும். விரும்பம் எனில், இந்தத் தளம் மூலமே வால்பேப்பர் ஓவியத்தை வாங்கிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி: http://artpip.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *