தரகர்கள் இல்லாமல் இணையம் மூலம் வாடகைக்கு வீடு தேடுவது எப்படி?

ணையம் இல்லாமல் இயக்கமில்லை என்பதுபோன்ற நிலை இன்றைக்கு வந்துவிட்டது. ஆடைகள், செல்போன், டிவி தொடங்கி மளிகைப் பொருட்கள்வரை எல்லாமும் இணையம் மூலம் வாங்கப்படும் சூழல் வந்துவிட்டது. அதுமட்டுமல்ல; பேருந்து, ரயில், தங்கும் விடுதி, திரையரங்க முன்பதிவுகளும் இணையம் வழியே நடக்கிறது. அதுபோல் வீடு, மனை வாங்குவதற்குப் பெரும்பாலும் நேரடித் தரகு முறையே பரவலாகப் பின்பற்றப்பட்டது. இப்போது இணையமும் ஒரு வழியாக ஆகியிருக்கிறது.

வீடு தேடும் இணையதளங்கள் முதலில் வாடகை வீடு தேடுவதற்காகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. பத்தாண்டுக்கு முன்புவரை வாடகை வீட்டுச் சந்தையில் தரகர்களின் கையே ஓங்கியிருந்தது. அவர்கள் தரகுக் கூலியாக ஒரு மாத வாடகையைப் பெற்றுவந்தார்கள். மேலும், வாடகைச் சந்தையையின் மதிப்பும் மிக உயர்ந்தது. பகுதி நேரமாகத் தரகுத் தொழில் பார்த்துவந்தவர்கள் பலர், இதில் கிடைக்கும் மிதமிஞ்சிய பணத்தால் இதை முழு நேரத் தொழிலாகக் கொணடனர். இந்த இடத்தில்தான் இணையம் மூலமாக வீடு தேடும் முறை இதற்கு ஒரு தடையாக ஆனது. அதனால் தரகர்கள் மூலம் வீடு தேடுவது குறைந்தது.

ஒவ்வோர் ஆண்டும் இணையம் மூலம் வீடுகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துவருவதாகவும் கூகுள் கூறுகிறது. மேலும், 4.3 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நடைபெற இணையத் தேடல் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை. யாகூ ஹோம்ஸ், ரெண்ட்.காம், மேஜிக் பிரிக்ஸ், 99ஏக்கர் ஆகிய தளங்கள் இணையத் தேடலில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூகுள் ஆய்வு தெரிவிக்கிறது.

வீடு விற்கும் நிறுவனங்களும் இப்போது இணையத்தை நாடத் தொடங்கியிருக்கின்றன. தங்களுக்கெனப் பிரத்யேக இணைய தளங்கள் மட்டுமல்லாது, வீடு தேடுவதற்கெனப் பிரத்யேகமாக உள்ள தளங்களிலும் தங்கள் வீட்டுத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இணையத்தில் வீடு தேடும்போது நீங்கள் விரும்பும் பகுதியை முதலில் தேர்வுசெய்துகொண்டால் ஒரே சொடுக்கில் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் திரையில் தோன்றிவிடும். அதில் ஒரு படுக்கையறை, இரு படுக்கையறை, மூன்று படுக்கையறை வீடுகள் என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். மேலும் இணைய தளத்தில் நீங்கள் தேர்வுசெய்த வீட்டுக்கு அருகிலுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை பற்றிய விவரங்களும் இருக்கும். மேலும், அந்த வீட்டின் ஒளிப்படங்களும் அந்தப் பகுதியில் பதிவேற்றப்பட்டிருக்கும். அதையும் பார்த்துக்கொள்ள முடியும்.

ஆனால், இணையதளத்தில் வீடு வாங்கும்போது நீங்கள் கவனிக்க செய்ய வேண்டிய விஷயம், நேரடியான கள ஆய்வு. நீங்கள் இணையத்தில் தேர்வுசெய்த வீட்டை நேரில் சென்று பார்வையிட வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட வீடு என்றால் அதன் தரத்தைச் சோதிக்க வேண்டும். கட்டப்பட்டுவரும் வீடு என்றால் அது எப்போது முழுமைபெறும், கட்டுமானத் தரம் எப்படி இருக்கிறது என்பதையும் அறிய வேண்டியது அவசியம்.

இணைய தளங்களில் வீடுகளுக்குச் சில நேரம் திடீர்ச் சலுகை கிடைக்கும். விற்கப்படாத வீடுகளுக்குத்தான் இம்மாதிரிச் சலுகைகள் அதிகமாக இருக்கும். அப்படியான வீடுகளை நேரடியாகக் கண்டு, அக்கம் பக்கத்தில் வீடு குறித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சில நேரத்தில் தண்ணீர்ப் பிரச்சினை இருக்கலாம். கட்டுமானங்களில் ஏதாவது பழுது இருக்கலாம். மனை மூலப் பத்திரத்தின் ஒரிஜினல் யார் பெயரில் இருந்தது, ஒரிஜினல் பெயரிலிருந்து யார் பெயருக்குச் சொத்து மாறியது, கட்டிடம் யார் கட்டிக் கொடுத்தது, லே-அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா, ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைத் தேடி அடைய வேண்டும்.

மின் கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது, நீங்கள் வீடு வாங்கும்போது கட்டணங்கள் எவையும் நிலுவையில் உள்ளனவா என்பதைக் கவனியுங்கள். அதை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுக்குமாடி வீட்டில் பிரிக்கப்படாத மனை என்றழைக்கப்படும் யு.டி.எஸ். மனை சரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா, என்பதைப் பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதே நல்லது. அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்று ஆவணங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சில நேரம் 2 அல்லது 3 மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப்பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியைக் கட்டிவிடுவார்கள். வரைபடங்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மனை அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்தச் சொத்தை வாங்குவதற்கு முன்பாக அந்தச் சொத்து சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். சிலர் அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கி இருப்பார்கள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே, அசல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்த பிறகு முடிவு எடுங்கள். அசல் பத்திரம் தொலைந்துவிட்டது என்று கூறினால் அதுதொடர்பாக போலீசில் கொடுத்த புகார், அந்தப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டுப் பாருங்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி டூப்ளிகேட் பத்திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராயுங்கள்.

ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதே ‘பவர் ஆஃப் அட்டர்னி’. அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறரா? இல்லையா என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். சில நேரத்தில் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து செய்திருக்கலாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல்வார்கள். அந்தச் சொத்தில் கட்டப்பட்டு வாங்கப்படும் அடுக்குமாடி வீடுகளுக்கு பின்னர் சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு. அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை கட்டுநர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதையும் கேட்டு வாங்க வேண்டும்.

சில இடங்களில் கட்டுநர்கள் கட்டுமானச் சான்றிதழ் வாங்கித்தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும் கேட்காமல் விட்டுவிடுவார்கள். ஒரு கட்டுநர் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றால், கட்டிய வீட்டில் விதிமுறை மீறல் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்வது கட்டுமானத் துறையில் வழக்கம். எனவே, கட்டுமான நிறைவுச் சான்றிதழ் மட்டுமல்ல, ஒவ்வொரு நிலையில் கட்டிடம் கட்டி முடித்ததற்கும் நிறைவுச் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கத் தவற வேண்டாம்.

நன்றி: தமிழ் இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *