தமிழக அரசு ஆழ்ந்து உறங்குகிறதா? பாமக ராம்தாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து நெருங்கும் நிலையில், தமிழக அரசு ஆழ்ந்து உறங்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக பெரும்படையே சதி செய்து கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கான அடிப்படைப் பணிகளைக் கூட செய்யாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. இதைப் பயன்படுத்திக் கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அடுத்தக்கட்ட தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக திட்டமிட்டு தொடுக்கப்பட்டுள்ள போர் ஆகும்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்த வழக்கை ஏதோ புதிதாக தொடரப்பட்ட வழக்கு என்று சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இது சமூக நீதிக்கு எதிரான தொடர் சதியின் அங்கமாகும். இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, மாணவர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 19% கூடுதல் இடங்களை உருவாக்க ஆணை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டும் அதேபோன்று கூடுதல் இடங்களை உருவாக்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வந்த போது, அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். அதேநேரத்தில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துவது பற்றி தனியாக மனு செய்யும்படியும், அதை விரைவாக விசாரித்து முடிவெடுக்கலாம் என்றும் அப்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி தான் 69% இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள் தொகை 69 சதவீதத்திற்கும் அதிகம் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழக மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 68%, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை 19%, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 87% என்று தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிவரத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதற்கு காரணம் அவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உத்தேசமாக தெரிவிக்கப்பட்டவை என்பது தான். இத்தகைய சூழலில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கக்கூடும்.

தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுவதற்குக் காரணமே திமுக, அதிமுக அரசுகள் தான். 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி அப்போது முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதியிடம் நேரிலும், அதன்பின் முதல்வராக வந்த ஜெயலலிதாவிடம் கடிதம் மூலமாகவும் வலியுறுத்தியிருந்தேன். அவர்கள் அதை ஏற்க மறுத்ததால் தான் இப்போது 69% இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதை விரைவாக விசாரித்து தீர்ப்பளிப்பதாக கடந்த ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்த போதே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ம் தேதி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த ஆணையிடும்படி கோரியது.

ஆனால், அதன்பின் இரு வாரங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்காதது வருத்தமளிக்கிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையை நிரூபிக்காவிட்டால் 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்பது தான் யதார்த்தம். ஆனால், இவ்விவகாரத்தின் தீவிரத்தை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவுகளை நினைக்கவே அச்சமாக உள்ளது.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது கடினமான பணி அல்ல. தமிழ்நாட்டில் இத்தகைய கணக்கெடுப்பை அதிகபட்சமாக 45 நாட்களில் நடத்தி முடித்துவிடலாம். இதற்காக அதிக செலவும் ஆகாது. இதன் மூலம் நீண்ட காலமாக ஆபத்தை எதிர்கொண்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். எனவே, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *