தமிழகத்தில் உள்ள முக்கிய பிள்ளையார் கோவில்களும், அதன் பெருமைகளும்

திருப்பூரில் உள்ள சக்தி விநாயகர் திருக்கோயிலில் கிழக்கு நோக்கி அருளும் அம்பிகையின் மடியில் பாலகனாக அமர்ந்து அருள்புரிகிறார் விநாயகர்.

* செங்கல்பட்டு அருகில் உள்ளது ஆனூர். இங்கு அமைந்திருக்கும் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயிலின் மதிலில் சங்கீத விநாயகரைத் தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் வலக்கையால் தொடையில் தாளம் போடும் பாவனையில் அருள்கிறார் இந்தப் பிள்ளையார். தொடர்ந்து ஏழு நாள்கள் நெய் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் சங்கீதக் கலையில் சிறப்படையலாம் என்பது நம்பிக்கை. தற்போது, இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

* நாகை மாவட்டத்தில் உள்ள நரிமணம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரை வணங்குபவர்கள், அவரின் தலையில் குட்டு வைத்து வழிபடுகிறார்கள்!

* மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டுகளுக்குப் பக்கத்தில் தான்தோன்றி விநாயகர் அருள்பாலிக்கிறார். ஓரடி நீளமும், அரையடி உயரத்துடன் குட்டி யானை ஒன்று படுத்திருப்பது போன்று காணப்படுகிறார். இதுபோன்ற விநாயகரின் சுயம்பு திருமேனியை வேறெங்கும் காண்பதரிது.

* நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் இரட்டைப் பிள்ளையார் கோயில் கருவறையில் மாப்பிள்ளைக் கோல அலங்காரத்துடன் இரண்டு பிள்ளையார்கள் அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

* கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில், ஸ்ரீஜுரஹர விநாயகரைத் தரிசிக்கலாம். கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் அருளும் இவரை வழிபட்டால், பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

* சேலம் கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக விநாயகரைத் தரிசிக்கலாம். இரண்டு முகங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகவும், மற்ற மூன்று முகங்கள் பக்கவாட்டு திசைகளை நோக்கியும் அருள்கின்றன.

* கும்பகோணம் சக்ரபாணி திருக்கோயில் விநாயகர் சங்கு, சக்கரங்கள் ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகிறார்.

* திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் கோயில் கொண்டிருக்கிறார் மிளகுப் பிள்ளையார். இவருடைய திருமேனியில் மிளகாய் அரைத்துத் தடவி அபிஷேகம் செய்தால், விரைவில் மழை பொழியும் என்பது நம்பிக்கை.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *