தட்டச்சுப் பயிற்சிக்கு புதிய பாடத் திட்டமா?

தட்டச்சுப் பயிற்சிக்கு 1980-90-ம்ஆண்டுகளில் மாணவ, மாணவிகளிடையே மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. வீதிக்கு ஒரு டைப்ரைட்டிங் பயிற்சி மையங்கள் அமைந்திருந்தன. காலை முதல் இரவு வரை அங்கு தொடர்ந்து மாணவ, மாணவிகள் தட்டச்சுப் பயிற்சி பெற்று வந்தனர். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து (ஷார்ட்ஹேண்ட்) முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைகிடைத்து வந்தது. கம்ப்யூட்டரின் வருகைக்குப் பின்னர் தட்டச்சு பயிற்சிக்கான மவுசு குறைந்தது. ஒரு கட்டத்தில் தட்டச்சுப் பயிற்சிக்குச் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து, பல தட்டச்சு நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கம்ப்யூட்டரில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டுமென்பதற்காக சிலர் தட்டச்சுப் பயிற்சிக்குச் சென்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தட்டச்சு நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநிலத் தலைவர் ஜெ.ரவிச்சந்திரன் கூறியதாவது:

1990-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தட்டச்சு நிறுவனங்கள் இருந்தன. ஆண்டுக்கு 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அரசின் தட்டச்சுத் தேர்வில் பங்கேற்றனர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு கம்ப்யூட்டர் வருகையால், தட்டச்சு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்தனர்.

ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தட்டச்சுப் பயில்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. சுமார் 2 லட்சம் பேர் பயிற்சி பெற்ற நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரமாக குறைந்தது. சில பயிற்சி மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1988-ல் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்தியதால், பாதிப்பை குறைக்க முடிந்தது.

அரசுத் தேர்வில் தட்டச்சு செய்யும் வேகத்தைக் கணக்கிடுவதற்காக 15 நிமிடங்கள் தட்டச்சு செய்ய வேண்டும். இது 10 நிமிடமாக குறைக்கப்பட்டது. இதேபோல, பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

தற்போது தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. ஆண்டுக்கு இருமுறை அரசு தட்டச்சுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 3 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

நன்கு தட்டச்சு பயிற்சி பெற்றவரால், கம்ப்யூட்டரை மிக வேகமாக இயக்க முடியும். பல நிறுவனங்களில் ஆட்களை தேர்வு செய்யும்போது, வேகமாக தட்டச்சு செய்பவருக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ போன்ற பணியிடங்களில், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்களை நியமிக்கின்றனர். அரசுத் தேர்வுகளிலும் தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீதிமன்றங்களில் தட்டச்சரின் பணி இன்றியமையாதது.

அரசுத் தேர்வுக்கான தட்டச்சு வேகத்தை 10 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தட்டச்சு வேகத்தைக் குறைக்காமல், 10 நிமிடத் தேர்வுக்குப் பதிலாக, 7 நிமிடத்தில் தேர்வு நடத்த வேண்டும். இந்த முறையால் வேகமாகவும், பிழையின்றியும் தட்டச்சு செய்ய முடியும். அரசுப் பணிக்கான தட்டச்சுத் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும்.

தற்போது புதிதாக தட்டச்சு இயந்திரங்களே தயாரிக்கப்படுவதில்லை. ஏற்கெனவே உள்ள தட்டச்சு இயந்திரங்களையே பயன்படுத்தி வரும் சூழல் நிலவுகிறது. பல அரசு அலுவலகங்களில் தமிழ், ஆங்கிலத் தட்டச்சு இயந்திரங்கள் பயன்பாடின்றி, வீணாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவ, மாணவிகளின் பயிற்சிக்கு கொடுத்து உதவலாம்.

6-ம் வகுப்பு படிக்கும்போதே தட்டச்சுப் பயிற்சி அளித்து, அவர்களை புகுமுக இளநிலை (ப்ரீ ஜூனியர்) தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது. அவர்கள் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பெரிதும் பயன்படுவர். தட்டச்சு பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசுத் தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு, அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

சில இடங்களில் அரசின் அங்கீகாரம் இல்லாமல் தட்டச்சுப் பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அங்கீகாரம் இல்லாத பயிற்சி நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *