shadow

தங்க குடும்பமாக மாறியது முதல்வரின் குடும்பம்: ராகுல்காந்தி தாக்கு

தெலுங்கானா மாகாணத்தில் வரும் 7ஆம் தேதி 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் போட்டியிடுகிறது.

இந்த மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது: 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா பணக்கார மாநிலமாக இருந்தது. இப்போது அது கடன்களின் பிடியில் தவிக்கிறது. மாநிலத்தில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது. ஆனால் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பத்தினர் சொத்துகளோ உயர்ந்து கொண்டே போகிறது.

30 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பேருக்கு இந்த ஆட்சியில் வேலை கிடைத்தது? விவசாயிகள், மலைவாழ் பழங்குடி மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கு 2 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள் கட்டித்தரப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்படி மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

குடிநீர், வளங்கள், வேலை வாய்ப்புகள் என எல்லாவற்றையும் பெற்ற தங்கமான மாநிலமாக தங்கள் மாநிலம் மாறும் என மக்கள் கனவு கண்டார்கள். ஆனால், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பம்தான் தங்கமான (பணக்கார) குடும்பமாக மாறி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply