டெங்குவில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் செய்யலாம்

சாதாரணமாக உடம்பு கொஞ்சம் சூடானாலே, ‘ஒருவேளை டெங்குக் காய்ச்சலாக இருக்குமோ?’ என்று நினைக்கும் அளவுக்கு, தமிழகமெங்கும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது டெங்குக் காய்ச்சல்.

தமிழகத்தில் உயிர்க் கொல்லி நோய்போல டெங்குக் காய்ச்சல் வேக வேகமாகப் பரவி வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் காரணமாகப் பலர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை தமிழகத்தில் 6,919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை அடுத்து டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான். இறந்தவர்களில் பச்சிளம் குழந்தைகளும் அடக்கம். தினசரி நாளிதழ்களை திறந்தாலே இன்று மர்மக் காய்ச்சலுக்குக் குழந்தை பலி’ என்று மனதை ரணமாக்கும் செய்தியைப் படிக்க நேர்கிறது.

‘இந்த டெங்குக் காய்ச்சலிலிருந்து நம்மை எளிதாகப் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்கிறார், சித்த மருத்துவர் வேலாயுதம். பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றிச் சொல்கிறார்.

டெங்கு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், கற்பூரத்தைச் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, அதைக் கால் முட்டிக்குக் கீழே தடவிக்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கும் இந்த எண்ணெய்யைத் தடவலாம்.

மிளகு, இஞ்சி, பூண்டு போன்ற காரமான மூலிகைப் பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் கிழங்கை நன்றாக உரசி, கரைத்து ஒரு கைக்குட்டையில் நனைத்துக்கொள்ள வேண்டும். கிராம்பு, பச்சைக் கற்பூரம், ஏலம் இவை மூன்றையும் அரைத்துப் பொடியாக்கி அந்தக் கைக்குட்டைக்குள் வைத்து குழந்தைகள் பயன்படுத்த கொடுக்கவும். இதை அவர்கள் நுகரும்போது, காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

நிலவேம்பு கசாயத்தைத் தொடர்ந்து மூன்று நாள்கள் குடிப்பது நல்லது.

டெங்கு

நிலவேம்பு குடிக்கும் முறை:

20 கிராம் சூரணத்தை 100 மிலி தண்ணீர் ஊற்றி 25 மிலி அளவுக்கு வருமாறு சுண்டக் காய்ச்சவும். இதைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த பின்னர் கசப்பு நீங்க தேன் அல்லது வெல்லத்தை எடுத்துக்கொள்ளலாம். ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு 10 மிலி கொடுக்கலாம்.

அடிக்கடி தேங்காய் எண்ணெய்யை உடம்பில் தடவிக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை காய்ச்சல் வந்துவிட்டால், அதன்பின்னர் செய்ய வேண்டியவை:

நிலவேம்புக் கசாயத்தை காலை, மாலை இருவேளையும் உணவுக்கு முன்னர் குடிக்க வேண்டும். அளவுதான் முக்கியம். சூரணத்தின் சத்து, நீரில் முழுவதுமாக இறங்க வேண்டும். அதை முறையாகச் சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டும்.

நிலவேம்புக் கசாயம் குடித்தும் காய்ச்சல் குறையவில்லை எனில், ஆடுதொடா இலையின் சாற்றைத் தேநீல் கலந்து குடிக்கலாம்.

பப்பாளி சாறை தேனில் கலந்தும் குடிக்கலாம்.

அத்திப் பழத்துடன் தேனைச் சேர்த்து ஜூஸாகக் கொடுக்கலாம்.

வாழைப்பூவுடன் மிளகு, இஞ்சி சேர்த்து சூப் தயாரித்துக் குடிக்கலாம்.

இவையெல்லாம் ரத்தத்தில் தட்டணுக்கள் உடையாமல் பாதுகாக்கும். தட்டணுக்கள் உடைவதால்தான் ரத்தம் உறையாமல் கசிந்துகொண்டே இருக்கிறது. இந்த ரத்தக் கசிவினாலே உயிரிழப்பு ஏற்படுகிறது.

டெங்கு

பெண்களின் கவனத்துக்கு:

பெண்கள் தினசரி மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். மஞ்சள் சிறந்த மருத்துவக் குணம்கொண்டது.

தேங்காய் எண்ணெய்யுடன் மஞ்சளைக் குழைத்து பூசிக்கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பாலோடு சேர்த்து உறை மருந்தை உரசி, தினசரி நாக்கில் தடவ வேண்டும்.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *