டிக் டிக் டிக்: திரைவிமர்சனம்

பூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இதனால் அதை தடுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான ஏவுகணையை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.

ஏவுகணையை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த ஏவுகணையை திருடி நமக்கு சாதகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்காக ஜெயம் ரவியும் அவரது குழுவினர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். வேற்று நாட்டின் ஏவுகணையை திருடி இந்தியாவுக்கு வந்த ஆபத்தை ஜெயம் ரவி குழுவினர்கள் தடுத்தார்களா? என்பதுதான் மீதிக்கதை

நாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா… குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

வில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

இந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

ஒருசில லாஜிக் மீறல் காட்சிகளை மறந்துவிட்டு பார்த்தால் இந்த படம் ஒரு விறுவிறுப்பான படம் என்றே கூறலாம்

ரேட்டிங்: 3.5/5

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *