டாக்டரைக் குழப்பாதீங்க!

முன்பெல்லாம் ஏதாவது நோய் வந்தால், மருத்துவரிடம் செல்வோம். மருத்துவர் நம்மைப் பரிசோதித்துவிட்டு சில மாத்திரை, மருந்துகளைத் தருவார். நமக்கு அந்த நோயைப் பற்றியோ மருந்தைப் பற்றியோ ஏதும் தெரியாது. ஆனால், மருத்துவர் மேல் இருந்த நம்பிக்கையில் சிகிச்சை பெற்றோம். குணமும் அடைந்தோம். இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில், அனைத்துத் தகவல்களும் நம் விரல் நுனியில் கிடைக்கின்றன. என்ன பிரச்னை என்றாலும், உடனே நாமே அதை கூகுளில் தேடித் தெரிந்துகொள்கிறோம். அது உடல்ரீதியான பிரச்னையாக இருந்தாலும் சரி, உளவியல் ரீதியான பிரச்னையாக இருந்தாலும் சரி… அனைத்துக்கும் பதில்களை ‘கூகுள் ஆண்டவரே’ கூறிவிடுகிறார்.

தற்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் என்ன நோய் என அறிந்துகொள்ள வருவது இல்லை. தாங்கள் அறிந்ததை உறுதி செய்துகொள்ளவே வருகிறார்கள். இது எந்த அளவுக்கு வசதியானதோ, அதே அளவுக்குப் பிரச்னை தரக்கூடியதும்கூட!

நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், அந்த மருத்துவருக்கும் நோயாளிக்குமான உறவு முக்கியமான பங்கு வகிக்கிறது. அந்த உறவு எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சீக்கிரமாக நோயாளியின் பிரச்னைகள் தீர்கின்றன.

நோயாளிகள் ஏதாவது ஒரு விதத்தில் தங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பதில் கிடைக்கவில்லை என்றாலோ, தாங்கள், சரியாகக் கவனிக்கப்படவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டாலோ, உளவியல்ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மருத்துவரிடம் வரும் நோயாளி களில் பலர், பல கேள்விகளைக் கேட்பார்கள். கேள்விகளைக் கேட்பதிலும் தெளிவு வேண்டும். சிலர், சரியா, தவறா என்ற முறையில் கேள்விகள் கேட்பார்கள். இது எல்லா சூழலிலும் சரியாக இருக்காது. உதாரணத்துக்கு, தலைவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒருவருக்குப் பரிந்துரைத்த சிகிச்சை, மற்றொரு நோயாளிக்குப் பொருந்தாது. அறிகுறிகள், காரணிகளைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

மனநலனில் ஏற்படக்கூடிய பாதிப்பு உடல் நோயாக வெளிப்படும். நெஞ்சு வலிப்பது போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவர். ஆனால், ஈ.சி.ஜி, எக்கோ எனப் பரிசோதனை செய்தால் எந்த பாதிப்பும் தெரியாது. இது போன்ற நோயாளிகளுக்குப் பல கேள்விகள் தோன்றும். மேலும், இவர்களே தங்களின் பிரச்னைகளுக்காகப் பற்பல பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்கள். இது போன்ற நோயாளிகளை சரியாக அணுகாவிட்டால், அவர்கள் மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் உளவியல் தேவைகள் பூர்த்தியாகாவிட்டால், மனஅழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.

வேறு சில நோயாளிகள், பொதுவாகவே பதற்றமான குணம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டுவது, அவர்களின் பதற்றமான மனநிலை. மேலும், அவர்களின் உறவினர்கள் இது போன்ற உடல் உபாதையால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது மரணத்தைத் தழுவியிருந்தால், அதுவே அவர்களை மேலும் பதற்றமாக்கும். இவர்கள், மருத்துவரிடம் தங்கள் பிரச்னையைப் பற்றிக் கூறி, தாங்கள் நலமாக இருப்பதான பதிலை எதிர்பார்ப்பார்கள்.

சில நோயாளிகள், மருத்துவரைக் காண வரும்போதே, பல கேள்விகளைக் குறித்து வைத்துக்கொண்டு வருவார்கள். அவர்களின் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கா விட்டாலோ, சில கேள்விகள் முக்கியமானவை அல்ல என மருத்துவர் ஒதுக்கிவிட்டாலோ அதிருப்தி அடைகிறார்கள். இவர்களை மிகக் கவனமாக அணுக வேண்டி உள்ளது.

இன்று பலர் தங்கள் பிரச்னைகள் பற்றி வலைத்தளத்தில் தேடி, அதற்கான அறிகுறிகள், தீர்வுகள் அனைத்தையுமே அறிந்துகொண்டு மருத்துவரிடம் வந்து, அவர்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை மருத்துவரும் கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மருத்துவர் அதிக நேரம் இவர்களோடு செலவிட வேண்டியது அவசியமாக இருக்கிறது. வலைதளத்தில் வரும் பல விஷயங்கள் ஆதாரமற்றவையாக இருக்கும். இதைச் சொன்னாலும் பலர் புரிந்துகொள்ள மாட்டார்கள். தான் எதிர்பார்த்த பதில் ஒரு மருத்துவரிடம் கிடைக்காவிட்டால், வேறு மருத்துவரை நாடிச் சென்றுவிடுவார்கள்.

சிலர் புதிதாக அறிமுகம் ஆகும் பரிசோதனை களைத் தனக்குச் செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். அந்தப் பரிசோதனைகள் தேவையற் றதாக இருந்தாலும், அவர்கள் வலியுறுத்துவார்கள். குடும்பத்திலோ, தெருவிலோ யாராவது ஏதாவது உடல் நலன் தொடர்பான பிரச்னையைக் கூறிவிட்டால், அது தனக்கும் நிகழுமோ என்று பயப்படுவார்கள். பலரின் ஆலோசனைகளையும் கேட்பது தவறான பழக்கம். ஆனால், இன்று பல நோயாளிகள் அதைத்தான் செய்கிறார்கள். மருத்துவரிடம் கேள்விகள் கேட்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதிகமாகக் கற்பனை செய்துகொண்டு கேட்பது தவறான பழக்கம். இதுபோல தேவையற்ற பல விஷயங்கள் உங்கள் மனதைக் குழப்புவதாக உணர்ந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *