ஜோதிகா, பெண்களுக்குச் சொல்லும் வெற்றியின் ரகசியம் இதுதான்!

வெற்றிக்கான ரகசியங்கள் எல்லோருக்கும் பொதுவானது அல்ல. ஆனால், அடிப்படையான சில விஷயங்கள் மாறாது. ஒருவர் சொல்லும் சின்ன விஷயம் நமது இலக்கை அடைய பெரும் உதவுவதாக இருக்கக்கூடும். நடிகை ஜோதிகா தான் நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஒரு விஷயம் பெண்கள் முயற்சிகளுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்கான ஒரு வழியாக இருந்தது.

வெற்றி எனும் வார்த்தையே அழகானது; மகிழ்ச்சி தருவது; புன்னகைக்க வைப்பது. வெற்றியை அடைவதற்கான காலமும் முயற்சியும் ஒவ்வொருவரின் இலக்குகளைப் பொறுத்தது. அதற்கான திட்டமிடலும் அதைச் சோர்வற்று நடைமுறைப்படுத்துவதிலுமே வெற்றியை அவர்களின் அருகில் வரவழைப்பதற்கான வழிகளாகும்.

வெற்றி, இலக்கு என்றதுமே பெரிய விஷயங்களுக்குத்தான் இதெல்லாம் பொருந்தும் என நினைத்து ஒதுங்கிவிட வேண்டாம். நம்மை ஓர் அடி முன்னகர்த்தும் எதுவுமே நம் வாழ்வின் வெற்றிதான். அதுவும் நமது சமூக அமைப்பில் பெண்களுக்கு ஓர் இலக்கு வைத்துக்கொண்டு அதை நோக்கிப் பயணிப்பது என்பதெல்லாம் எட்டா கனியாகவே இருந்து வருகிறது. அந்தக் கனியை தாங்களும் ருசிக்க முடியும் எனும் நம்பிக்கையை கல்வியே அளிக்கிறது.

கல்விதான் பெண்களுக்கு புதிய புதிய உலகங்களைத் திறந்துகாட்டியது. கண்களைக் கூசச் செய்யுமளவுக்கு ஒளியைத் தந்ததும் கல்விதான். அதனைக் கைப்பற்றியே தங்கள் பயணத்தினை அர்த்தப்பூர்வமாக மாற்றி அமைக்கின்றனர் பெண்கள்.

தன் இலக்கை அடைவதற்கு ஆணை விட, இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல்தான் பெண்களுக்கு. தங்களின் இலக்கை அடைய தங்கள் குடும்பத்தினர் உதவி மிக அவசியம். அந்த உதவிகளைப் பெறுவதை பெண்கள் கவனமாக கையாள வேண்டியவர்களாக உள்ளனர். இது ஆண்களுக்கும் பொருந்து என்றாலும் சமூக மாற்றம் முழுமையடையாத நிலையில் பெண்களின் பக்கத்தின் நின்றே இதைக் கூற வேண்டியிருக்கிறது.

மகளிர் மட்டும்

சரி, நடிகை ஜோதிகா பட விழாவில் கூறிய விஷயத்துக்கு வருவோம். ஜோதிகாவுக்கு திருமணமாகி பத்தாண்டுகளாகி விட்டன. திருமணத்திற்கு முன் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவர். பின், குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் முழு ஈடுபாடு காட்டினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். 36 வயதினிலே எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, மகளிர் மட்டும் எனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும்போது,

“பெண்கள் வேலை செய்வதற்கு ஆண்கள் உதவுவது இயல்பு. என் வீட்டில் சூர்யாவின் அம்மா, சூர்யா, கார்த்தி ஆகியரோடு இப்போது எனக்கு மதிய உணவு கொடுத்துவிடுகிறார்கள். காலையில் வேலைக்குச் செல்லும்போது ‘என்ஜாய் யுவர் வொர்க்’ என உற்சாகமூட்டுவார் அப்பா. அதேபோல சூர்யா, காலையில் நான் சூட்டிங் புறப்படும்போது காரில் ஏறும் வரை இருந்து வழியனுப்புவார். திடீரென ஒருநாள் கார்த்தி வந்து, ‘அண்ணி, மகளிர் மட்டும் படத்தில் ஒரு பாட்டு பாடறேன்’ எனச் சொல்லிவிட்டு சென்றார். அது ரொம்ப சப்போர்ட்டிங்கா இருந்தது. சிவகுமார் குடும்பத்தின் எல்லா ஆண்களுக்கும் நன்றி”

எனக் குறிப்பிட்டார். இதை ஜோதிகா சொல்லும்போது அவரின் குரலில் அவ்வளவு நெகிழ்வு இருந்தது. மனதிலிருந்து வரும் வார்த்தைகளாக அவை இருந்தன. இந்தக் குணம் முக்கியமானது.

ஒரு நாளின் இயல்பான வேலைகள் தொடங்கி, ஒவ்வொன்றிலும் நம் குடும்பத்தினரின் உதவிகள் இருக்கும். சில பெண்களின் வீடுகளில் அது இயல்பாக கிடைத்திருக்கும். பலருக்கு போராடிய பிறகே கிடைத்திருக்கும். ஆனாலும் அந்த உதவிகளுக்கான நன்றிகளை தக்க நேரத்தில், அந்த நன்றியின் முழு அர்த்தமும் அவர்களைச் சென்று சேரும் விதத்தில் சொல்லிவிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது. பெண்கள் உதவுதற்கு ஆண்கள் நன்றி சொல்கிறார்களா என்ன… எங்கள் வீட்டில் ஒரு முறைக்கூட எங்களுக்கு ஆண்கள் நன்றி சொன்னதே இல்லை… என உங்களுக்குத் தோன்றலாம். ஆனாலும் நீங்கள் சொல்லுங்கள். ஒரு நல்ல பழக்கம் உங்கள் மூலமே தொடங்கட்டும். அதைப் பார்த்து ஆண்களும் தொடர்வதற்கான வாய்ப்பாக அது அமையக்கூடும். நல்ல விஷயங்களைத் தொடங்குவதற்கு தயங்க வேண்டாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *