ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் முக்கிய மருந்துகள் விலை 2.29% உயரும்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டால் முக்கிய மருந்துகளின் விலை 2.29 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி யில் பெருவாரியான அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு மத்திய அரசு 12 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது இவை 9 சதவீத வரி வரம்புக்குள் வருகின்றன. எனினும் இன்சுலின் உள்ளிட்ட சில மருந்துகளுக்கான விலை புதிய வரிவிதிப்பு முறையில் குறையும். தற்போது 12 சதவீத வரிவிதிப்பில் உள்ள சில மருந்துகள் ஜிஎஸ்டியில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்து விலை கட்டுப் பாட்டு ஆணையம் (என்பிபிஏ) மருந்துகளின் மீதான இந்த கூடுதல் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி யிருந்தது. ஏற்கெனவே அதிகபட்ச சில்லரை விலையிலேயே உற் பத்தி வரி சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது ஜிஎஸ்டி வரியில் இதை தனியாக பிரித்து காட்ட வேண் டும். இன்னொரு பக்கம் பட்டியலிடப் பட்ட சில மருந்துகளுக்கு உற்பத்தி வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. தற்போது மாற்றியமைக்கப் பட்ட சட்டத்தின்படி புதிய அதிகபட்ச விலையை மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக ஜிஎஸ்டியை சேர்க்காமல் அதிகபட்ச விலையை தீர்மானிக்க வேண்டும் என்று என்பிபிஏ குறிப்பிட்டுள்ளது.

பட்டியலிடப்படாத மருந்து களைப் பொறுத்தவரையில், விலையை உயர்த்துவதைத் தவிர நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்றும் என்பிபிஏ கூறியுள்ளது. ஆனால் அதிகபட்ச சில்லரை விலையிலிருந்து அனுமதிக்கப்பட்ட 10 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக பேசிய என்பிபிஏ தலைவர் புபேந்திர சிங், ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் மிகப் பெரிய அளவில் சுமூக நிலை உருவாகும் என நம்புவதாகவும், நாட்டில் மருந்து விநியோகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது 12 சதவீத வரி விதிப்பில் உள்ள இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளுக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் அதிகபட்ச சில்லரை விலையை குறைக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. வரிக் குறைப்பால் ஏற்படும் ஆதாயம் நுகர்வோருக்கும் சென்றடையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *