shadow

ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன பயன்?

என்றாவது ஒரு நாள் அண்டார்டிகாவுக்குப் போவீர்களா? ஒவ்வோர் ஆண்டும் வெளிநாட்டுச் சுற்றுலா செல்பவரிடம்கூட இந்தக் கேள்விக்கு பதில் இருக்காது. ஆனால், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த முன்னாள் மாணவி பூர்வி குப்தாவிடம் கேட்டால், ‘ஆமாம், போகப் போகிறேன்’ என்று உற்சாகமாகச் சொல்வார். பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் இந்தக் கண்டத்துக்கு 80 பெண்கள் அடங்கிய குழு ஒன்று, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் செல்ல இருக்கிறது. இந்த மெகா பயணத்தில் இடம்பெற்றுள்ள பெண்களில் பூர்வி குப்தாவும் ஒருவர்.

பூர்வி குப்தா உள்ளிட்ட இந்தப் பெண்களின் அண்டார்டிகா பயணத்தின் பின்னணியில் ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘ஹோம்வார்ட் பவுண்ட்’ என்ற அமைப்பு இருக்கிறது. பெண்களின் தலைமைப் பண்பு, சித்தாந்தம், அறிவியல் முயற்சிகளை வெளிக்கொண்டுவரும் அமைப்பு இது. பெண்களிடம் உள்ள இந்தத் திறன்களை அண்டார்டிகாவை மீட்டெடுக்கும் முயற்சிக்காகவும் பயன்படுத்திவருகிறது இந்த அமைப்பு. இதை ஒரு இயக்கமாக மாற்றி இந்தப் பூமியை அழகாக்க அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவத் துறையில் உள்ள பெண்களைப் பயன்படுத்தி பெண்கள் தலைமைத்துவம் பெறும் வகையிலான விழிப்புணர்வையும் அந்த அமைப்பு ஏற்படுத்திவருகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு டிசம்பரில் 76 பேர் அடங்கிய பெண்கள் குழு அண்டார்டிகாவுக்குப் பயணமானது. இந்தப் பெரும் பயணத்தில் 76 பெண்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்றார்கள். உறைபனி சூழ்ந்திருக்கும் உலகின் தென் முனையில் இந்தப் பெண்கள் 20 நாட்கள் தங்கிப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அண்டார்டிகாவில் ஏற்படும் பாதிப்புகளும் ஆய்வில் முக்கிய இடம் பிடித்தன.பெண்கள் மேற்கொண்ட சவால்களும் சிக்கல்களும் நிறைந்த இந்தப் பயணம் பெரும் வெற்றிபெற்றது.

இதையடுத்து அதேபோன்றதொரு அண்டார்டிகா பயணத்தை அடுத்த ஆண்டும் ‘ஹோம்வார்ட் பவுண்ட்’ ஏற்பாடு செய்துள்ளது. வரும் பிப்ரவரியில் இந்தப் பயணம் தொடங்க உள்ளது. இந்தப் பயணத்தில் இந்த ஆண்டு 80 பெண்கள் செல்லவுள்ளனர். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் பெரும் பயணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து இந்த மெகா பயணத்தில் பங்கேற்கும் ஒரே பெண் பூர்வி குப்தா. சென்னை ஐ.ஐ.டி.யில் அவர் பி.டெக். உயிரித் தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி), எம்.டெக். உயிரித் தொழில்நுட்பம் படித்தவர். தற்போது லண்டனில் உள்ள மெக்கென்ஸி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். அண்டார்ட்டிகாவுக்குச் செல்லும் பயணக் குழுவிலும் இடம்பிடித்துள்ள அவர், அங்கே சுமார் 3 வார காலம் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளர். இந்தப் பயணத்தில் 13 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் இணைந்து தலைமைத்துவ மேம்பாடு, சித்தாந்தம், தொடர்பியல் திறன்களை முன்னெடுக்க பூர்வி திட்டமிட்டிருக்கிறார்.

அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், மருத்துவம் போன்ற துறைகளில் தலைமைப் பொறுப்பில் பெண்கள் மிகக் குறைவாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பயணத்தில் பங்கேற்பதாகப் பூர்வி சொல்கிறார். இந்த விழிப்புணர்வு பயணத்துக்குக் காரணமாக ஒரு விஷயத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

“சென்னை ஐ.ஐ.டி. என்ற பெரிய உயர்கல்வி நிறுவனத்தில் நான் படித்தபோது 10 சதவீதப் பெண்கள் மட்டுமே படித்தார்கள். முதன்முறையாக நான் மைனாரிட்டியாக இருப்பதைப் போன்ற உணர்வு சென்னை ஐ.ஐ.டி.யில் படித்தபோது ஏற்பட்டது” என்கிறார் பூர்வி குப்தா.

சமீபத்தில் இந்தியப் பொருளாதார மன்றம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. ‘இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களில் வெறும் 14.2 சதவீதத்தினரே பெண்கள். பஹ்ரைன் போன்ற நாடுகளில்கூட இது 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் அறிவியல் இளங்கலையைப் படிப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்தகட்ட நிலைக்குச் செல்வதில்லை’ என்று கூறுகிறது அந்த அறிக்கை. அதேபோல இஸ்ரோவில் சுமார் 14 ஆயிரம் பணியாளர்கள் இருந்தாலும், இதில் பெண்கள் 20 சதவீதத்தினரே. சுமார் 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இஸ்ரோவில் இதுவரை ஒரு பெண்கூட அதன் தலைவராக உயரவில்லை. இதுபோன்ற ஆணாதிக்கச் சூழலில் பெண்கள் ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற எண்ணத்தைப் பெண்களின் மனதில் விதைக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவும் பூர்வி குப்தா தீர்மானித்திருக்கிறார்.

குளிரான பகுதியில் சூடான புதிய ஆரார்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ளப்போகிறார்கள் இந்தப் பெண்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *