ஜல்லிக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுகள்

கட்டுமானப் பொருள்களுள் முக்கியமானது ஜல்லி ஆற்று மணலைப் போல் இதுவும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியது. அதனால் இதற்கும் தட்டுப்பாடு உண்டு. சில மாவட்டங்களில் கல் குவாரிகள் கிடையாது. அதனால் அந்தப் பகுதிகளில் இதற்குத் தட்டுப்பாடு இருக்கும். ஆற்று மணலுக்கு மாற்று உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் நடப்பதுபோல இதற்கும் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான் பிளாஸ்டிக் ஜல்லி

நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகின் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டாக்குவதில் இந்தியா கணிசமான பங்கு வகிக்கிறது. நாள் ஒன்றுக்கு 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உண்டாக்கப்படுவதாக சென்ற ஆண்டு வெளியான மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இது பதிவுசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த அறிக்கை. இவை அல்லாமல் பதிவுக்கு அப்பாற்பட்டும் கழிவுகள் இருக்கக்கூடும்.

இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மக்கும் தன்மையற்றவை. இதனால் இவை வெளியில் வீசப்படும்போது ஒரு உறைபோலப் பூமியின் மேற்பரப்பை மூடிவிடும். அந்தப் பகுதியில் மழைநீர் இறங்காது ஒரு சதுர அடியை நான்கைந்து பாட்டில்கள் சேர்ந்து மறைப்பதைப் போல இன்னும் சில ஆண்டுக்குள் பூமியே இந்தப் பாட்டிகளால் மூடப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்ய வேண்டியது அவசியம். அந்த விதத்திலும் பிளாஸ்டிக் ஜல்லி முக்கியமானதாகிறது.

தயாரிக்கும் முறை

நாள்தோறும் டன் கணக்கில் உற்பத்திசெய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளே இதற்குக்கான மூலப் பொருள். முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை, அதைத் துகள்களாக அரைத்து எடுக்க வேண்டும். இதற்குத் தனியான இயந்திரங்கள் இருக்கின்றன. இயந்திரங்கள் வாஙக் வேண்டிய அவசியம் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சித் தொழிற்கூடங்களை பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால், அவர்களே அதைத் துகள்களாக்கிக் கொடுத்துவிடுவார்கள்.

நன்றாக மண் துகள்போல் ஆகும் அளவுக்கு அதைத் துகள்களாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் துகள்களை ஜல்லிக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வழக்கமாக கான்கிரீட் தயாரிப்பதுபோல கட்டுமான மணல், தண்ணீர், சிமெண்ட் ஆகியவற்றுடன் பிளாஸ்டிக் துகள்களைச் சேர்த்துக் கலவை உண்டாக்க வேண்டும். 60 சதவீதம் பிளாஸ்டிக் துகள், 20 சதவீதம் சிமெண்ட், 20 சதவீதம் கட்டுமான மணல் என்ற விகிதத்தில் இந்தக் கான்கிரீட் கலவை தயாரிக்கப்படுகிறது.

கான்கிரீட் கலவையாக அல்லாமல் கட்டுமானக் கல்லாகவும் இதைத் தயாரிக்க முடியும். இதற்கான முயற்சிகள் முன்பே தொடங்கிவிட்டன. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளையும் சிமெண்ட் கலவையும் சேர்த்து கட்டுமானக் கல்லைத் தயாரித்துள்ளது. பெட் பிரிக்ஸ் என அதற்குப் பெயரிட்டுள்ளனர். அதே சமயம் அதிக சக்தியை எடுத்துக்கொள்ளும் செங்கல்லுக்கும் மாற்றாக ஒரு கட்டுமானப் பொருளையும் கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த பெட் பிரிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அமைப்பும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருளாக இதை அங்கீகரித்துள்ளது.

பயன்கள்

பிளாஸ்டிக் கழிவுகள் மிக அதிகளவில் கிடைப்பதால் இதன் தயாரிப்புச் செலவு குறைவாக இருக்கும். மேலும் எளிதாகக் கிடைக்கக்கூடியவையும்கூட. இந்த முறையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் கட்டுமானக் கல் உறுதியானது. வழக்கமான கட்டிடங்களின் அதே அளவு தாங்கு திறன் இந்த வகைக் கற்களுக்கும் உண்டு. இவை நீடித்து உழைக்கக்கூடியவை. ரசாயனத்தாலும் நீராலும் எளிதில் சேதமடையாத தன்மை கொண்டவை. இந்தக் கற்கள் எடை குறைந்தவை. அதனால் கட்டுமானப் பணிகளின்போது இதைக் கையாள்வது மிக எளிது.

பயன்பாடு

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில நாடுகளில் குறைந்த விலை வீட்டுக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சீனாவில் இந்த வகை பிளாஸ்டிக் ஜல்லி தயாரிக்கப்பட்டுச் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் இன்னும் பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *