செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிய சலுகை

பெண் குழந்தைகளுக்காக பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்காக, பெற்றோர்கள் பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழ்நாட்டின் அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது.

2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்த திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் சேமிக்கும் பணத்துக்கு 9.1 சதவிகித வட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு தற்போது 8.1 சதவிகித வட்டி அமலில் உள்ளது.

இந்தக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் தவணைத் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு தவறினால் வட்டி குறையும். மாதாமாதம் குறைந்தபட்ச தவணைத்தொகையாக ரூ.1000 தவணைத் தொகையாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதிக பட்சமாக ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம்.

இந்நிலையில், செல்வமகள் திட்டத்தின் குறைந்தபட்ச மாத டெபாசிட் தொகை, ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்பட்டதால், பலர் அதிருப்தி அடைந்த நிலையில் அவர்களை சரிகட்ட மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *